ஐ.நா.வில் ஜனாதிபதி நல்லிணக்கப் பேச்சு; நினைவுகூரும் உரிமை எமக்கு இல்லை! – அம்பலப்படுத்துகிறார் கஜேந்திரன் எம்.பி.

நினைவுகூரும் உரிமை எமக்கு இல்லை

“நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நா.வுக்குச் சென்று, தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றோம் எனக் கூறுகிறார். ஆனால், எங்களுடைய உறவினர்களை – எங்களுக்காகப் போராடியவர்களை – நினைவுகூரும் உரிமை எமக்கு இல்லை இந்த அரசாங்கம் எமக்கு அதை வழங்கத் தயாரில்லை” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வியாழக்கிழமை யாழ்ப்பாணக் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட கஜேந்திரன், காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தியாக தீபம் திலீபனின் நினைவிடத்துக்குச் சுடரேற்றுவதற்கு நான் தயாராகும்போது, அங்கு நின்ற காவல்துறையினர் தடுத்தார்கள். நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கின்றதா என்று நான் அவர்களிடம் கேட்டேன்.  ஆனால், அவர்கள் நீதிமன்றத் தடை உத்தரவைக் காண்பிக்கவில்லை. நீதிமன்றத் தடை உத்தரவை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால், எங்கள் உரிமையை மீறும் உங்களது செயலை ஏற்க முடியாது எனத் தெரிவித்தேன்.

நினைவிடத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக நான் நின்ற இடத்திலேயே சுடரேற்றியபோது, அங்கு இருந்த காவல்துறையினர் மிலேச்சத்தனமாகக் காட்டுமிராண்டித்தனமாக எங்களுடைய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அதனைத் தட்டி அணைத்தார்கள். அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

நினைவுகூரும் உரிமை என்பது எங்கள் எல்லோருக்கும் இருக்கின்றது. காவல்துறையினர் சட்டம் – ஒழுங்கைப் பாதுகாப்போம் என்ற போர்வையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி சிங்கள பெளத்த மேலாண்மையை நிறுவ இங்கிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்தவொரு இடத்திலும் தமிழர்களுடைய உணர்வுகளை மதித்து செயற்பட அவர்கள் தயாராக இல்லை. இந்த நாட்டினுடைய ஜனாதிபதி ஐ.நாவுக்குச் சென்று, தாங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தப் போகின்றோம் எனக் கூறுகின்றார். ஆனால், எங்களுடைய உறவினர்களை – எங்களுக்காகப் போராடியவர்களை நினைவுகூரும் உரிமையைக்கூட அவர்கள் எமக்கு வழங்கத் தயாரில்லை.

இப்போது எங்களைக் கைதுசெய்து கொண்டுவந்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் நான் தனியாகத்தான் அங்கு சுடரேற்ற சென்று இருந்தேன். அப்போது அந்த இடத்தில் காவல்துறையினர் என்னுடன் முரண்பட்டபோது, என்ன நடைபெறுகின்றதென நியாயம் கேட்க முற்பட்ட போது அவர்களையும் சேர்த்து கைதுசெய்து தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக எதிர்வரும் ஒக்டோபர் 27ஆம் திகதி வழக்குக்குத் தவணையிடப்பட்டுள்ளது.

தனி ஒருவனாக நான் அந்த இடத்தில் சென்றால்கூட சட்டத்தை மீறியதாக சித்திரிக்கப்படுகின்றது. சிறைச்சாலைக்குள் சென்று கைத்துப்பாக்கியைத் தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை” என்றார்.

இதேவேளையில் கஜேந்திரன் மீதான வழக்கு எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதான தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இவரது கைதை வன்மையாகக் கண்டித்துள்ளன.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021