நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் அதன் பாது காப்புக்கு அதிக நிதிகளை ஒதுக்கி ஒரு போர் மனநிலையில் தம்மை பேண வேண்டும் என நேட்டோ என்ற மேற்குலக நாடுகளின் பாது காப்புக் கூட்டணியின் தலைவர் மார்க் றூற் கடந்த புதன்கிழமை(15) பிரசல்ஸில் இடம்பெற்ற பாதுகாப்பு அதிகாரிகளின் கூட்டத்தில் பேசும் போது தெரிவித்துள்ளார்.
ரஸ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் எமக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அவர்கள் எமது ஜனநாயகத்திற்கு சவாலாக உள்ளன. போரை தடுக்க வேண்டும் என்றால் அதற்கு நாம் தயாராக வேண்டும். போரை எதிர் கொள்ளும் மனநிலைக்கு நாம் வரவேண்டும் எமது பாதுகாப்பு வியூகங்களை பலப்படுத்த வேண்டும்.
எனவே நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் அந்த நாடு களின் மொத்த உற்பத்தியில் 5 விகிதத்தை நேட்டோவின் பாதுகாப்பு செலவீனங்களுக்கு வழங்க வேண்டும் இல்லை எனில் ரஸ்ய மொழியை அவர்கள் கற்க வேண்டும் அல்லது நியூசிலாந்துக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 4 அல்லது 5 வருடங்களுக்கே பாதுகாப்பாக இருக்கும். நேட்டோ நாடுகள் அனைத்தும் ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யும் ஆயுதங்களை ரஸ்யா 3 மாதங்களில் செய்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்
ரஸ்யாவின் கடற்படையினர் மற்றும் எரிபொருள் கப்பல்கள் அதிகம் பயன்படுத் தும் பல்டிக் கடற்பகுதியில் நேட்டோ கடற்படை தனது நடவடிக்கைகயை அதிகரிக்கப் போவதாகவும், இது கடலுக்கு அடியால் செல்லும் தொலைதொடர்பு வயர்களை பாது காக்கும் திட்டம் எனவும் றூற் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.