முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன தற்கொலை செய்துக் கொண்டார் என்ற செய்தியை சமூகமயப்படுத்திய நபர் யார் என்பதை முதலில் விசாரிக்க வேண்டும். மர்மமான உயிரிழப்புக்களை தற்கொலை என்று குறிப்பிட்டு விசாரணை கோப்புக்களை மூடிமறைப்பதற்கான முயற்சிகளே எடுக்கப்படுகின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (20) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தற்கொலை செய்துக் கொண்டதாக ஊடகங்கள் தான் செய்தி வெளியிடுகின்றன. பொலிஸ் விசாரணைகளில் அவ்வாறு ஏதும் குறிப்பிடப்படவில்லை.நீதிமன்றமும் அவ்வாறு ஏதும் அறிவிக்கவில்லை.
இந்த மர்மமான மரணம் தற்கொலை என்று முதலில் ஊடகங்களுக்கு குறிப்பிட்டது யார் என்பதை முதலில் ஆராய வேண்டும். நாட்டின் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த ஒருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டார் என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது.
தற்கொலை செய்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு பாரதூரமான பிரச்சினைகள் ஏதும் இருக்கவில்லை என்று அவரது குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளார்கள்.ஆகவே இவ்வாறான பின்னணியில் இதனை தற்கொலை என்று குறிப்பிடுவதை ஏற்க முடியாது. அண்மைகாலமாகவே பிரதான வழக்குகளின் சாட்சியாளர்கள் மற்றும் பிரதிவாதிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதை அவதானிக்க முடிகிறது.இவற்றை தற்கொலை என்று குறிப்பிட்டு கோப்புக்களை மூடும் முயற்சிகளே தற்போது இடம்பெறுகிறது என்றார்.



