பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ்-அருட்தந்தை மா.சத்திவேல்

301 Views

பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே

பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைக்கு மத்தியில் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள மக்கள் அடுத்த வேளை உணவிற்கே கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தனது நரி நாடகத்தில் சிக்க வைக்கும் முயற்சியாகவே ஒரு லட்சம் ரூபா கொடுப்பதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வறுமை நிலையை பயன்படுத்தி மரணச் சான்றிதழ் அல்லது காணாமல் போனதற்கான சான்றிதழை கொடுத்து போராட்டத்தை சிதைக்கவும் அமைப்புக்குள் கருத்து மோதலை உருவாக்கவும் ஆட்சியாளர்கள் காய் நகர்த்துகின்றனர்.

இதுவரைக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியலில் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுவோர்க்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் அல்லது இறப்பு சான்றிதழும் கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகையும் காணாமல் போனதாக கூறப்படும் இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு சிலவேளை மகிழ்ச்சியைத் தரலாம். புது வருடத்திற்கான உதவித் தொகையாகவும் அமையலாம்.

ஆனால் வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தமது உறவுகளை தேடி 2009 ஆம் ஆண்டு அதைத் தொடர்ந்து நீண்ட போராட்டம் நடத்தியதோடு தற்போது ஐந்து வருடங்களை கடந்தும் தொடர் போராட்டம் நடத்துவது அரசு அறிவிக்கும் ஒரு லட்ச ரூபா பிச்சை பணத்தை பெற்றுக் கொள்வதற்கு அல்ல. தமிழ் உயிருக்கு உயிரான உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் அதற்கான நீதியை பெற்றுக் கொள்வதற்குமாகும். இதனை கொச்சைப்படுத்துவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. இதற்கு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடும் உறவுகளே “நாங்கள் உங்களுக்கு பணம் தருகிறோம் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கூறுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

நாட்டின் சுதந்திர தினத்தை கரி நாளாகவும், சர்வதேச பெண்கள் தினத்தினையும் அவ்வாறே அறிவித்து சர்வதேசத்தின் நீதிக்கதைகளை தட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில் ரூபா ஒரு லட்சம் தருகிறோம் எனக் கூறுவது போராட்டத்தை அசிங்கப்படுத்தும் செயல் மட்டுமல்ல நீதிக்காக போராடும் ஒட்டுமொத்த தமிழர்களையும் இழிவுபடுத்தும் செயலுமாகும்.

அரசு ஒடுக்குமுறை இயந்திரத்தினால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அவர்கள் சார்ந்த குடும்பத்திற்கு உயிருக்கு உயிரானவர்கள், அவர்கள் தமிழர் தேசத்தின் வாழ்வு காவலர்கள். இவர்களைத் தேடியே நூற்றுக்கும் அதிகமானோர் நோயில் விழுந்து மரணத்தை தழுவியுள்ளனர். இதுவும் சாட்சியங்களை மறைக்கும் அல்லது இல்லாதொழிக்கும் அரசின் கொலை. எனவே நாம் கருதுகின்றோம், இக்கொலையும் பயங்கரவாதத்தின் இன்னுமொரு திட்டமே, காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் அல்லது காணாமல் போனமைக்கான சான்றிதழ் எனலாம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Tamil News

Leave a Reply