விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அனுமதி

அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானம்

விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அதேவேளை விமானங்களுக்கான எரிபொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இதுவரையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டொலர் நெருக்கடி காரணமாக நாட்டிற்கு விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதில் பெரும் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

எனவே விமானங்களுக்கான எரிபொருளை நாட்டிற்கு இறக்குமதி செய்ய தனியார் துறையை அனுமதிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டால், தங்கள் முழு ஆதரவையும் வழங்கவுள்ளதாக எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் அமைச்சருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களின் நடவடிக்கைக்கு ஆதரவளிக்குமாறு இலங்கையில் உள்ள விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Tamil News

Leave a Reply