தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டாலே நிரந்தர தீர்வு காண முடியும்- ரெலோ 

128 Views

தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள்

இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வுகாண முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு  கருத்து தெரிவிக்கையில்,

‘வடக்கு, கிழக்கு தாயக பூமியிலே எங்கள் இனக்குடிபரம்பலை சிதைப்பதற்கும், எங்களுடைய பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கும், எங்கள் தாயக பூமியை கூறு போடுவதற்குமான,  திட்டமிட்ட காணி அபகரிப்பும், அந்த காணி அபகரிப்பின் ஊடாக, சிங்கள குடியேற்றங்களை கொண்டு வந்து, நிறுவுவதற்கான முயற்சியையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

கடந்த 11ம் திகதி பாராளுமன்றத்திலே இது சம்பந்தமான எதிர்ப்புக் குரல் எழுப்பப் பட்டிருக்கிறது. இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட இருக்கின்ற போராட்டத்திற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் தன்னுடைய முற்றுமுழுதான ஆதரவினை வழங்கும்.  இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து எங்கள் காணி நிலங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இன்று இருக்கின்றோம்.

இதைத் தாண்டி நாங்கள் பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பதும், தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவதும் என்பது நிரந்தர  தீர்வாக அமையாது.

எங்களுடைய மாகாண சபை சொற்ப அதிகாரங்களோடு செயல்பட்டுக் கொண்டிருந்த போது கூட கடந்த காலங்களில் இப்படியான காணி அபகரிப்பையும், குடியேற்றங்களையும்  நிறுத்தி இருந்தது.

இந்த மாகாண சபை அதிகாரங்களை எங்களுடைய அரசியல் தீர்வை எட்டும் வரைக்கும், 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வந்த இந்த மாகாண சபை அதிகாரங்களை, நிரந்தரமாக, மீளப் பெறப்பட முடியாத, காணி அதிகாரங்களை, பெற்றுக்கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்சனைக்கான நிரந்தர விடிவை நாங்கள் காணமுடியும்.

அதற்கான ஒரு பாரிய அரசியல் நகர்வு ஒன்றை நாங்கள் இப்பொழுது மேற்கொண்டிருக்கிறோம். மேலும் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை,  பலப்படுத்தி நிரந்தரமான அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வினை மேற்கொண்டருக்கிறோம்.

இந்த நகர்விலே இது அரசியல் தீர்வாக அல்ல. ஆனால், எங்களுடைய இனக்குடிப் பரம்பலை பேணுவதற்கு தற்போதைய கால சூழலில் அவசியமான ஒரு விடயமாக கருதயே இதை நாங்கள் நகர்த்தியிருக்கிறோம்.  இதில் இணைந்து கொள்ள அனைத்து தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளையும் அழைத்திருக்கிறோம்.

ஆகவே எங்களுடைய அதிகார பலத்தை நாங்கள் பெற்று கொள்வதற்கும்  சர்வதேச ஆதரவினை கோருவதற்கும், இலங்கை அரசாங்கத்தினுடைய இந்த செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குமான எங்களுடைய அரசியல் நகர்வை இப்பொழுது வெற்றிகரமாக, நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.

தொடர்ந்தும் எங்கள் தாயக பூமியை மீட்பதற்கான, காப்பாற்றுவதற்கான, போராட்டங்களை நடத்துவதோடு, அதற்கான, அதிகாரங்களை பெற்று நிரந்தரமாக இதற்கு ஒரு விடிவை காணுவதற்கான செயல்திட்டத்தை, தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம்.

அதில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் தலைவர்களும்,அரசியல் பிரதிநிதிகளும், எங்களுடைய இந்த செயற்பாட்டில் ஒன்றிணைந்து ஒருமித்த நிலைப்பாட்டிலே, நாங்கள் சர்வதேச ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம்தான், நிரந்தரமாக இதற்கு தீர்வு காண முடியும். என்பது எங்களுடைய நிலைப்பாடு’ என மேலும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply