ஒரே நாடு ஒரே சட்டம்- ஆலோசனைக் குழுவில் தமிழர்கள் நியமிக்கப்பட்டமை ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே- மூத்த பத்திரிகையாளர் பி.மாணிக்கவாசகம்

133 Views

ஆலோசனைக் குழுவில் தமிழர்கள்

“ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான ஆலோசனை செயலணிக்கு மூன்று தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையானது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே அன்று வேறொன்றுமில்லை” என  இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் பி. மாணிக்கவாசகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒரே நாடு ஒரே சட்டம் என்பது தேசிய நலனையும் நாட்டு மக்களின் ஐக்கிய நலன்களையும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. இனவாதப் போக்குடையவரும் சிறுபான்மையினருக்கு எதிரான போக்குடையவரும் நாட்டின் சட்டதிட்டங்களையும் நீதிமன்றத்தையும் மதிக்காத முரட்டுப் போக்குடைய பௌத்த மதகுருவாகிய ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு ஆழமான அரசியல் உள்நோக்கத்தையே கொண்டிருக்கின்றது. இதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே நாட்டின் மூன்றாவது சிறுபான்மையினராகிய முஸ்லிம் மக்கள் சார்பில் நான்கு பேருடன் சிங்களவர்களையே பெரும்பான்மையாகக் கொண்டதாக அந்த செயலணியை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச நியமித்திருந்தார்.

அந்த ஆலோசனைக் குழுவில் தமிழர்கள் உள்வாங்கப்படாமையைக் கண்டித்தும் எதிர்த்தும் ஆட்சேபனைக் குரல்கள் எழுப்பப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த மூன்று தமிழ்ப்பிரதிநிதிகளும் நியமனம் பெற்றுள்ளனர். இந்த வகையிலான நியமனம் ஒன்றே அந்தப் பிரதிநிதிகளின் நியமனம் வலுவற்றது, செல்லாக்காசுக்கு ஒப்பானது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.

அது மட்டுமன்றி, ஒரு நாட்டின் ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான தேவை எதுவும் அற்றதொரு நிலையில் அத்தகைய சட்டத்தை உருவாக்குவதற்கு சட்ட நிபுணர்கள் அல்லாத ஓர் இனவாத பௌத்த பிக்குவின் தலைமையில் செயலணி ஒன்றை உருவாக்கியிருப்பது, ஜனாதிபதி கோட்டாபய அராசாங்கத்தின் சர்வாதிகரத் தன்மையையும், பாகுபாடான இனவாதப் போக்கையும் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கின்றது. இதுவே உண்மையான நிலைமை.

இத்தகைய நிலையில் பெரும்பான்மை பலமற்ற நிலையில் நாட்டின் இரண்டாவது சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் சார்பில் மூன்று பிரதிநிதிகளை நியமித்திருப்பதை ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்று குறிப்பிடாமல் வேறு எந்த வகையில் குறிப்பிட முடியும்?” என்றார்.

  ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad ஒரே நாடு ஒரே சட்டம்- ஆலோசனைக் குழுவில் தமிழர்கள் நியமிக்கப்பட்டமை ஒரு கண்துடைப்பு நடவடிக்கையே- மூத்த பத்திரிகையாளர் பி.மாணிக்கவாசகம்

Leave a Reply