இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்

114 Views

இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்

சிறிலங்காவின் கால்மிதிப்பு அழைப்புத் தந்திரோபாயம், தமிழக மாநில சுயாட்சி உரிமைக்குப் புதிய சவால்

இந்திய சிறிலங்கா உறவில் புதிய கொள்கை மாற்றங்களை இன்றைய சிறிலங்கா அரசு ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியாவுக்கான சிறிலங்காத் துணைத்தூதரகம் என்று, சென்னையில் உள்ள அதன் துணைத் தூதரகத்தை சிறிலங்கா மாற்றி யமைத்துள்ளது.  1960ஆம் ஆண்டின் சிறிமா சாத்திரி உடன்படிக்கையின் கீழ் தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்களின் நலன் பேணு நிர்வாக அமைப்பாகவே இந்தச் சென்னைத் துணைத்தூதரகம் கட்டமைக்கப்பட்டது. இது இன்று சிறிலங்கா அரசாங்கத்தின் கொள்கைப்பரப்பு மையமாக, அனைத்துலகத் தூதரக முறைமைகளுக்கு மாறாகச் செயற்படத் தொடங்கியுள்ளது. தமிழக மக்களதும், தமிழக மாநில அரசினதும் நாளாந்தச் செயற்பாடுகளில் நேரடியாகவும்,  மறைமுகமாகவும் தலையீடுகளை மேற்கொள்ளும் அமைப்பாக இது இன்று வளர்ச்சி பெற்று வருகிறது.

தமிழக மாநில சுயாட்சி உரிமையினைத் தென்னிந்திய மாநிலங்களுக்கான சுயாட்சி உரிமை என்கிற பொதுவடிவுக்குள் இட்டுச் செல்லும் புதிய அரசியல் கொள்கை மாற்றம் ஒன்றை, இந்தியாவுக்குள் இது கட்டமைத்துள்ளது.  இந்திய அரசியலமைப்பில் மாநிலங்கள் தங்களது மொழியையும், பண்பாட்டையும் பேணுவதில் சுயாட்சி உரிமையுள்ளவை என்கிற  மாநில ஆட்சியமைப்பு முறைமையையே இது வன்முறைப் படுத்துகிறது. வெறுமனே தென்னிந்தியாவுக்கான கலாச்சார வர்த்தகக் கட்டமைப்பாக, தமிழக மாநில அரசை  உருமாற்றும் உத்தியை இது வளர்க்கிறது.  இதன்வழி  தமிழக அரசின் மொழித்துவ, இனத்துவ உரிமைகள் பேணும் செயற்பாடுகளை மட்டுப்படுத்தும் போக்கைச் சிறிலங்கா தமிழக மாநில அரசின் ஆட்சிப் பரப்புக்குள்ளேயே தொடக்கி வைத்துள்ளது.

அதே நேரத்தில், தமிழக ஈழத் தமிழர்களின் மொழித்துவ, இனத்துவ உறவாடல்களைப் புலனாய்வுக்கு உட்படுத்துவதுடன், மாநில அரசின் கொள்கை உருவாக்கல்களுக்கு வரைவிலக்கணம் கொடுத்து, மேலாதிக்கம் செய்யும் வெளிநாட்டுத் தலையீட்டு அமைப்பாகவும் இந்தத் தென்னிந்தியத் துணைத்தூதுவர் என்ற புதிய கட்டமைப்பு திகழ்கிறது.

தென்னிந்தியத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள திரு வெங்கடேஸ்வரன் அவர்கள், தமிழக முதலமைச்சர் உருவாக்கிய, உலகத் தமிழர்கள் அமைச்சு குறித்து வீரகேசரிக்கு அளித்த செவ்வியின் சில பகுதிகள் இதனைத் தெளிவாக்குகிறது. அதில் அவர் தமிழக அரசின் ‘உலகத் தமிழர்கள் அமைச்சு’ என்பதில் அமையும் ‘உலகத் தமிழர்கள்’ என்பதில் இலங்கைத் தமிழர்களுக்கு சிறப்புரிமை அளிக்க வேண்டாமென்று புதிய வரைவிலக்கணம் கொடுத்துள்ளமை அவரது அதிகார வரம்பு மீறல் செயலாகியுள்ளது.

தமிழக மாநில அரசின் எல்லைக்குள் இருந்தபடியே தென்னிந்தியாவின் முதலமைச்சர்களையும், அரசியல் தலைவர்களையும் சந்தித்தும், வர்த்தக விரிவாக்கத் திட்டமிடல்களைச் செய்தும் தனது அரசாங்கத்தின் ‘கொள்கைப்பரப்பு’ மையமாக இத்துணைத்தூதரகத்தை இவர் மாற்றியமைத்து வருவது, தமிழக அரசியலில் திகைப்பையும், வியப்பையும் அளித்து வருகிறது.

சீன இந்திய உறவு குறித்து அரசியல் ரீதியான கருத்தாக்கங்களை அவர் தனது செவ்வியில் வெளிப்படுத்தியுள்ளமை, இந்திய ஒன்றிய அரசின் ஒருமைப்பாடு, இறைமைப் பாதுகாப்பு குறித்த விடயங்களில் டில்லியில் உள்ள சிறிலங்காத் தூதரகம் பதிலளிக்க வேண்டும் என்ற மரபை மீறி இந்தத் துணைத் தூதரகத்தையும் மற்றொரு தூதரகமாக தரம் உயர்த்திச் செயற்படத் தொடங்கியுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு நாட்டுக்குள் துணைத்தூதரகம் நிர்வாக விடயங்களையே செய்தல் என்கிற உலக மரபையும் மீறிவருகிறார்.

அத்துடன் இன்று இந்தியாவில் தூதுவராகவும், துணைத் தூதுவர்களாகவும் உள்ள மூவருமே அரசுப் பணியாளர்களிலிருந்து திறமையின், அனுபவத்தின் வழி நியமிக்கப் படல் வேண்டும் என்னும் தூதுவர் நியமன முறையில் நியமிக்கப் படவில்லை. அரசியல் நியமனங்களே என்பதை இவரே ஓப்புக்கொண்டுள்ளார்.

தாங்கள் சிறிலங்கா அரசுத்தலைவர் கோட்டபாய ராசபக்ச மற்றும் சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராசபக்ச ஆகியோரின் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற அடிப்படை யிலேயே நியமிக்கப்பட்டதாகச் செவ்வியில் தெரிவித்துள்ளார். இது தகுதி, திறமை பார்க்காது, நம்பிக்கைக்குரியவர்களை நியமிப்பதால் தனது ஆட்சியை உறுதிப் படுத்தும் புலனாய்வுக்கான நியமனமாகவும், குடும்ப ஆட்சியை, குடும்ப நண்பர்களைக் கொண்டே உலக விரிவாக்கம் செய்யும் நீட்சியாகவும் சிறிலங்கா அரச அதிபரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

அதே வேளை அவர் தனது நியமனத்தின் நோக்காக தென்னிந்திய முதலீட்டாளர் களையும், வர்த்தகர்களையும் சீனாவைச் சிறிலங்காவில் கால்பதிக்க அழைத்தது போல், சிறிலங்காவில் கால்மிதிக்க அழைப்பதற்காகவே எனக் கூறியுள்ளார். அத்துடன் தமிழகத்தில் இருந்து சிறிலங்கா அரசுக்கு ஆதரவாகச் செயற்படும் சில அமைப்புக்கள் வழியாகத் தமிழகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்களுக்கான உதவிகளைச் செய்யவேண்டும் என அவர் நெறிப்படுத்துவது ஒரு தூதரகம் இன்னொரு நாட்டுக்குள் முகாமைத்துவம்  செய்யக் கூடாது என்கிற அனைத்துலக முறைமைக்கு மாறான செயற்பாடாகவும் உள்ளது. அத்துடன் இதுவரை இவரைச் சந்திக்க அனுமதி கொடுக்காத தமிழக முதலமைச்சர் மாண்பமை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மற்றைய மாநில முதலமைச்சர்கள் சந்தித்துள்ளார்கள்; நீங்கள் சந்திக்கவில்லை என்கிற மறைமுக வழிப்படுத்தலாகவும் இவரது செவ்வி அமைகிறது.

சிறிலங்கா, தமிழக-ஈழத்தமிழர்கள் இனத்துவ, மொழித்துவ இரத்த உறவு முறையைப் பிரித்து தமிழகத் தமிழர்களை தென்னிந்தியர்கள் என்ற உறவில் சிறிலங்காவுடன் உரையாடல்கள், உறவாடல்களை மேற்கொள்ளுங்கள்; அந்த வகையில் சிறிலங்காவில் கால்மிதித்து உங்களுக்கான தனிப்பட்ட வர்த்தக நலன்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள் என்கிற தனது அரசியற்கொள்கையைப் பரப்புபவராக இவரை நியமித்துள்ளமை இவராலேயே தெளிவாக்கப்பட்டுள்ளது. இவரது நியமனம் தமிழக மாநில அரசின் சுயாட்சி உரிமைகளுக்குப் புதிய சவாலாக அமையப் போகிறது. இதனால் தமிழக அரசும், தமிழக ஆளுநரும் இவ்விடயத்தில் மிகக் கவனமான அணுகுமுறைகளை உடன் தொடங்க வேண்டிய தேவையுள்ளது என்பது இலக்கின் எண்ணமாக உள்ளது.

ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad இலக்கு மின்னிதழ் –156 – ஆசிரியர் தலையங்கம்

Leave a Reply