சப்ரியின் பதவிதுறப்பு ‘நாடகம்’ அகிலன்

551 Views

 

சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்'

சப்ரியின் பதவிதுறப்பு ‘நாடகம்’

அகிலன்

ஜனாதிபதி நியமித்த ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான செயலணி தொடர்ந்தும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்தமை, இந்த விவகாரம் எந்தளவுக்கு தீவிரமாகவுள்ளது என்பதை வெளிப்படுத்தியது. ஆனால், எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே ஜனாதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டார். அலி சப்ரியும் நிச்சயமாக அதனைத்தான் எதிர்பார்த்திருப்பார்.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’  என்ற கோசம் இலங்கைக்கு புதிதல்ல. கோட்டாபய ராஜபக்ச தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போதே அதனை ஒரு கொள்கைப் பிரகடனமாக வெளியிட்டிருந்தார். இதற்கான செயலணி ஒன்று அமைக்கப் பட்டமையும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான். இதன் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைதான் இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி யிருக்கின்றது. ஞானசாரரின் நியமனம் தான் நீதி அமைச்சர் அலி சப்ரியையும் குழப்பியது.

ஞானசாரர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்குத் தண்டனை பெற்று சிறை சென்றவர். ஜனாதிபதியால் மன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர். அதற்கு மேலாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான தீவிர செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட ஒருவர். முஸ்லிம்கள் அவரை ஒரு எதிரியாகவே பார்க்கின்றார்கள். அவ்வாறான ஒருவர்  ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது முஸ்லிம்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியமானதல்ல

இலங்கை பல்லின மக்களைக் கொண்ட ஒரு நாடு. தமிழ், முஸ்லிம் மக்களுக்கென தனியான சில சட்டங்களும் உள்ளன. இது நீண்டகாலம் வழமையாக இருந்து வருகின்றது. குறிப்பாக, தேசவழமைச் சட்டம், முஸ்லிம்களுக்கான திருமணச் சட்டம் போன்றவை தனித்துவமானவை. ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற பெயரில் முன்னெடுக்கப் படக்கூடிய செயற்பாடுகள் சிறுபான்மை இன மக்களுடைய இந்த தனித்துவங்களை அழித்து விடலாம் என்ற அச்சம் தீவிரமடைவதற்கு ஜனாதிபதியின் இந்த நியமனம் (ஞானசாரர்) காரணமாகவுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச எப்போதும் தன்னை சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியாகவே வெளிப்படுத்தி வருகின்றார். ‘பௌத்த சிங்கள மயமாக்கல்’ என்பது அவரது கொள்கையாக வெளிப்படுத்தப்படுகின்றது. அதன் பிரதிபலிப் பாகத்தான் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கோசத்தை அவர் முன்வைத்தார். அதற்கு சிங்கள மக்களின் அங்கீகாரத்தையும் தேர்தலின் மூலமாகப் பெற்றுக்கொண்டார். இப்போது, தீவிர சிங்கள பௌத்த தேசியவாதியான ஞானசார தேரரை அதற்கான செலலணியின் தலைவராக அவர் நியமித்திருப்பது, தன்னுடைய பாதையில் அவர் உறுதியாகச் செல்லப்போகின்றார் என்பதை வெளிப்படுத்துகின்றது.

BBBB சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்' அகிலன்நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்காக சிறைத்தண்டனை பெற்ற ஒருவராக ஞானசார தேரர் இருந்தாலும் கூட, அவர் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அமைச்சுக் களுக்குள் புகுந்து அடாவடி செய்தமை உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறிய அவரது செயற்பாடுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. இவ்வாறான ஒருவரை, இந்த செயலணியின் தலைவராக ஜனாதிபதி நியமித்திருப்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. அரசுக்குள்ளும் அதிருப்தி உள்ளது.

இவ்வாறான செயலணிகளுக்கு சிறுபான்மையினர் பெயரளவுக்கு நியமிக்கப் பட்டாலும், அவர்கள் வெறுமனே தலையாட்டுபவர்களாக  மட்டுமே இருந்துள்ளார்கள். 13 உறுப்பினர்களுடன் நியமிக்கப்பட்ட இந்த செயலணியில் 4 முஸ்லிம் கள் நியமிக்கப் பட்டிருந்தார்கள். தமிழர்கள் யாரும் இருக்கவில்லை. அது குறித்து உருவான விமசனங்களையடுத்து 3 தமிழர்கள் இப்போது நியமிக்கப் பட்டுள்ளார்கள். மூவருமே செயலணியில் இருந்து சாதிக்ககூடியவர்களல்ல. தலையாட்டக் கூடியவர்களையே அடையாளம் கண்டு அரசாங்கம் நியமித்திருக்கின்றது.

சிறுபான்மையினரும் இதில் உள்ளார்கள் எனக் காட்டிக்கொள்வதற்கான உத்தியாக இது இருந்தாலும், ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலைத்தான் ஞானசாரர் முன்னெடுப்பார் என்பதுதான் நிதர்சனம். ஜனாதிபதியினதும் ஞானசாரரினதும் நிகழ்ச்சி நிரல் ஒன்றுதான்! அதற்குள் இருக்கும் சிறுபான்மையினப் பிரதிநிதிகளால், இந்த நிகழ்ச்சி நிரலில் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. அவர்கள் மாற்றுவதற்கு முயற்சிக்கப் போவதும் இல்லை.

நீதி அமைச்சராகத் தான் இருக்கும் நிலையில், தன்னை மீறி அவருக்குத் தெரியாமல் இவ்வாறான நியமனம் ஒன்று இடம்பெற்றுள்ளது என்பதுதான் அலி சப்ரிக்கு சங்கடத்தை ஏற்படுத்திய விடயம். அவர் ஒரு முஸ்லிமாக இருப்பதால், அவர் சார்ந்த சமூகத்துக்குள் இருந்து வரக்கூடிய விமர்சனங்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

ஏற்கனவே கொரோனாவால் பலியாகும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வதென அரசாங்கம் எடுத்த முன்னைய முடிவும் அவருக்கு – அவரது சமூகத்துக்குள் கடும் நெருக்கடியைக் கொடுத்திருந்தது. இப்போது சட்டத்துடன் தொடர்பான செயலணி ஒன்றை அமைக்கும் போது சட்டத்துக்குப் பொறுப்பான அமைச்சருடன் அது குறித்து ஜனாதிபதி கலந்தாலோசிக்கவில்லை என்பது பல செய்திகளைச் சொல்லியிருக்கின்றது.

நீதி அமைச்சர் வெறும் தலையாட்டியாக இருக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் விருப்பத்தை அது பிரதிபலிக்கின்றது. இது நீதி அமைச்சரை அவமானப்படுத்தும் ஒரு செயற்பாடு!

இந்தப் பின்னணியில் தமது சமூகத்துக்குள் தன்னுடைய நிலையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகத்தான் இரண்டு இராஜினாமா கடிதங்களுடன் கடந்த செவ்வாய் கிழமை அலி சப்ரி ஜனாதிபதியை சந்தித்தார். ஒன்று தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதம். மற்றது அமைச்சர் பதவியைத் துறப்பதற்கான கடிதம். இவ்வாறு அலி சப்ரி செல்லும் போது அந்தக் கடிதங்களை ஜனாதிபதி ஏற்க மறுப்பார் என்பது சாதாரண பொது மக்களும் எதிர்பார்க்கும் விடயம் தான். இது அலி சப்ரிக்கும் தெரிந்திருக்கும்.

ஆக, தமது சமூகத்துக்குள் தன்னுடைய நிலையைப் பாதுகாக்க அலி சப்ரி அரங்கேற்றிய ஒரு நாடகமாகவே இது உள்ளது. உண்மையாகவே பதவி துறப்பது அவரது விருப்பமாக இருந்திருந்தால், அவர் தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளருக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். அது ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்தால், அவரது எம்.பி. பதவி என்ன அமைச்சர் பதவியிலும் அவர் இருக்க முடியாது. சட்டத்தரணியான நீதி அமைச்சருக்கு இது தெரியாததல்ல. ஜனாதிபதியிடம் நேரில் கையளித்தால் அவர் அதனை நிராகரிப்பார் என்பதை எதிர்பார்த்தே காலநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பும்வரை காத்திருந்து இராஜினாமா கடிதங்களுடன் சென்று அவரை சந்தித்தார் அலி சப்ரி.

அமைச்சரவைப் பதவிகளை வழங்கும் போது சிங்கள அரசாங்கங்கள் இரகசிய நடைமுறைகள் சிலவற்றை வைத்திருக்கின்றது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும். பாதுகாப்பு, வெளிவிவகாரம், நீதி, கல்வி அமைச்சு போன்றன எப்போதும் நாட்டின் தலைவருக்கு நம்பிக்கையானவர்களுக்கே கொடுக்கப்படும். குறிப்பாக சிபான்மையினர் அதனை எதிர்பார்க்க முடியாது. இந்த நடைமுறைக்கு முரணான 1970 இல் பதியூதீன் முகமத்தை கல்வி அமைச்சராக சிறிமாவோ பண்டாரநாயக்க நியமித்தார். அவர் மூலமாகவே கல்வியில் தரப்படுத்தல் கொண்டு வரப்பட்டது.  சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்'சந்திரிகா வெளிவிவகார அமைச்சராக கதிர்காமரை நியமித்தார். அவர் மூலமாகவே சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக் கப்பட்டன.

இதுபோல மேலும் உதாரணங்கள் உள்ளன. சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது சிறுபான்மையினர் ஒருவரையே அதற்கான துறைசார்ந்த அமைச்சராக நியமிப்பது அவர்களுடைய வழமை.

இப்போது அலி சப்ரியை ஜனாதிபதி கோட்டாபய நீதி அமைச்சராக நியமித் திருப்பதும் அதற்காகத்தான். குறிப்பிட்ட பதவிகளிலிருந்து அவர்கள் விலகிச் செல்ல மாட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டுதான் அந்தப் பதவிகள் வழங்கப் படுகின்றன. அது சரியான கணிப்புத்தான் என்பதை அலி சப்ரியின் கடந்தவார நகர்வு உறுதிப்படுத்தி யிருக்கின்றது.

  ilakku Weekly Epaper 156 November 14 2021 Ad சப்ரியின் பதவிதுறப்பு 'நாடகம்' அகிலன்

Leave a Reply