அரசியல் கைதிகளிற்கு நீதி கிடைக்கப்பெற்றாலே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்-அருட்தந்தை மா.சத்திவேல்

நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்


பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சரான லொஹான் ரத்வத்தயின் கொலை அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்த அனுராதபுரம் சிறைச்சாலை அரசியல் கைதிகள் எட்டுபேரின்  அடிப்படை உரிமை தொடர்பான வழக்கு கடந்த 21ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது சட்டமா அதிபர் சார்பாக முன்னின்று  உதவி சொலிசிட்டர் ஜெனரல் ரஜீவ் குணதிலக்க “கைதிகள் தங்களை யாழ்ப்பாண சிறைக்கு மாற்றுமாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றதோடு அதற்கு காரணம் “அவர்கள் உறவினர்களின் உதவியை பெற்றுக் கொள்வார்கள்” என்பதாகும் என சிங்கள ஊடகம் ஒன்று(srilanka Brief 22.10.2021) செய்தி வெளியிட்டிருந்தது.

இக்கூற்று உண்மையெனில் இது நியாயத் தன்மை அற்றது மட்டுமல்ல அடிப்படை மனித உரிமை மீறும் மற்றும் அதனை அவமதிக்கும் செயலுமாகும் என்பதால் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கவலை அடைவதோடு இத்தகைய கூற்றுக்கள் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் தன்மை கொண்டது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றது.

ஒருவரை நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிடும் வரை அவர் நிரபராதியே. அத்தோடு “சிறைக் கைதிகளும் மனிதர்களே” எனும் மகுடவாசகம் சிறைச்சாலை சுவரிலே எழுதப்பட்டுள்ள நிலையில் சிறைக்கைதிகள் தமக்கான உதவிகளையும், சட்ட ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்வதற்கு தகுதி உடையவர்களே. அதற்கு சட்டத்தில் இடமுண்டு. அத்தோடு ஒரு நீதிமன்றம் குற்றவாளியாக தீர்ப்பிட்ட ஒருவர் சட்ட உதவியோடு மேல் நீதிமன்றத்திற்கு மீண்டும் மனு செய்யும் உரிமையும் உள்ளது. இதனை தடுக்க எவராலும் முடியாது. அதுமட்டுமல்ல சிறையில் இருப்பவர்கள் உறவினர்களை பார்ப்பதற்கும் அவர்களோடு உறவை வளர்ப்பதற்கும் உதவிகளை பெறுவதற்கும் இது வரை எவரும் தடை விதித்ததும் கிடையாது.  இதனை எவராலும் தடுக்க முடியாது. தடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும்.

விசேடமாக அனுராதபுரம் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் பாதிக்கப்பட்டவர்கள். மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பவர்கள். இவர்களை மனிதாபிமானம் கருதியும், பாதுகாப்பு கருதியும் அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றுவதே சிறந்தது. அதை விடுத்து பெற்றோர், உறவினர் உள்ள இடத்திற்கு மாற்றினால்  உதவிகளைப் பெற்று விடுவார்கள் என மறுப்பு தெரிவிக்கின்றமை மனித உரிமை மீறும் செயல் மட்டுமல்ல சிறைச்சாலை மகுட வாசகத்தையும் தூசிக்கும் செயலுமாகும்.

சிறைச்சாலைக் கைதிகள் பெற்றோரின் உதவிகளை பெற்றுவிடுவார்கள் என்றால் அனைத்து கைதிகளுக்கும் இது பொருத்த வேண்டும் அவ்வாறு சிறைக் கைதிகள் அத்தனைபேரையும் அவர்களின் உறவுகள் சந்திக்க முடியாது தூர இடங்களில் இருக்கும் சிறைசாலைகளுக்கு மாற்றுவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுக்குமா?

குற்றம் புரிந்தவராக கருதப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த ஆட்சியாளர்களின் உதவியோடு வேறு ஒரு ராஜாங்க அமைச்சு பதவியை தக்கவைத்துக் கொண்டு  சுதந்திரமாக நடமாடி திரிகின்றார். இது எந்தவகையில் நியாயம்?

குற்றவாளிகள் குற்ற நீக்கம் செய்யப்படுவது குற்றங்கள் மீளப் பெற்றுக் கொள்வதும் ஏதோ ஒரு சக்தியின் உதவியினால் என்பதை சட்டமா அதிபர் திணைக்களத்தின் உதவி சொலிசிஸ்டர் ஜெனரல் உணர்வாரா?

அரசியல் அதிகார துஷ்பிரயோகம் செய்வோரும், மனித உரிமை மீறுவோரும், அதனை தூசிப்போரும் கூட தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடாது. அதேவேளை பாதிக்கப்பட்ட அரசியல் கைதிகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் விரும்பும் சிறைச்சாலைக்கு மாற்றம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதோடு அவர்களுக்கு நீதியும் கிட்ட வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மட்டுமே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்” என்று கூறப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 152 october 17 2021 Ad அரசியல் கைதிகளிற்கு நீதி கிடைக்கப்பெற்றாலே நீதித்துறை மீது மக்கள் நம்பிக்கை கொள்வர்-அருட்தந்தை மா.சத்திவேல்