இடிந்து விழும் நிலையில் லயன் குடியிருப்பில் வாழும் மக்கள்!

நுவரெலியா, ஹங்குரன்கெத்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட மெரி கோல்ட்  தோட்டத்தின் கீழ் பிரிவு பங்குசீதா இலக்கம் 14 லயன் குடியிருப்பில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகளற்ற மிக ஆபத்தான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.

கோனகல நகரத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில், மேரி கோல்ட் தமிழ் வித்தியாலயத்தைக் கடந்து செல்லும் பாதையின் அடிப்பகுதியில், 200 மீட்டருக்கும் குறைவான செங்குத்தான சரிவொன்றில் இந்த லயன் குடியிருப்பு அமைந்துள்ளது.

2014 ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் இந்த லயன் குடியிருப்பு மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

அக்காலப்பகுதியில் இக்குடியிருப்பின் இரு பக்கங்களிலும் 12 குடும்பங்கள் வசித்து வந்தன. எனினும், இயற்கை அனர்த்த அச்சத்தினால் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளன.

தற்போது, வேறு இடங்களுக்குச் செல்ல வழியின்றியும், எவ்வித அடிப்படை வசதிகளுமின்றியும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 14 முதல் 20 வரையிலான மக்கள் இடிந்து விழும் நிலையிலுள்ள இந்த லயன் அறைகளிலேயே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.