யாழ்ப்பாணம்-நெடுந்தீவிலிருந்து வெளியேறும் மக்கள்

நெடுந்தீவில் வசிக்கும் மக்கள் வெளியேறுகின்றனர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் வசிப்பவர்கள் இத்தீவில் வசித்தாலும், நிலவும் பொருளாதார நெருக்கடி தீவில் போக்குவரத்து வசதிகள் இன்மை மற்றும் அன்றாட உணவு கிடைக்காமை, பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் தீவை விட்டு வேறு இடங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த நிரந்தர படகுச் சேவை இடைநிறுத்தப்பட்டதால், சாதாரண மீன்பிடிப் படகுகளில் யாழ்.மாவட்டம் மற்றம் ஏனைய தீவுகளுக்குச் செல்வதாகவும், இதனால் உயிருக்குப் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நெடுந்தீவு மக்கள் தெரிவிக்கின்றனர்.

வேலையில்லாத் திண்டாட்டம், மருத்துவ வசதிகள் இன்மை, கல்வி வசதிகள் இன்மை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை போன்ற காரணங்களால் தீவு வாசிகள் யாழ்ப்பாணத்தை அண்டிய பகுதிகளுக்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் ஏற்கனவே இடம்பெயரத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வினால் நாளாந்த வருமானமோ அல்லது பொருளாதாரமோ இல்லாத குடும்பங்கள் நெடுந்தீவில் வாழ்வதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், பல குடும்பங்கள் உணவை பெற்றுக் கொள்வதில் மிகவும் சிரமப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கமோ அல்லது அரச சார்பற்ற நிறுவனமோ பொருளாதார மேம்பாட்டிற்கு சில உதவிகளை வழங்க வேண்டும், இல்லையெனில் நெடுந்தீவு தீவில் வசிப்பவர்கள் அனைவரும் தீவை விட்டு வெளியேறுவார்கள் என அத்தீவின் வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நன்றி- தினக்குரல் Tamil News