தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற விரிவான திருத்தங்களின் ஆரம்பமாக எதிர்பார்க்கப்படும் செலவினங்களை மட்டுப்படுத்துவதற்கான சட்டமூல வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பெப்ரல் அமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். அக்கடித்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தத்தின் ஊடாக இலங்கையில் வலுவானதொரு ஜனநாயக நிர்வாகமுறையைக் கட்டியெழுப்புவதற்குக் காணப்பட்ட மிகச்சிறந்த வாய்ப்பு தவறவிடப்பட்டிருப்பினும், 20 ஆவது திருத்தத்திற்கு சமாந்தரமாக ஏற்றுக்கொள்ளத்தக்க திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு முன்நின்று செயற்பட்ட உங்களுக்கும், அதற்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.
அதேவேளை தேர்தல்முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திருத்தங்கள் தொடர்பில் உங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளில் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற எதிர்பார்க்கப்படும் செலவினங்களை மட்டுப்படுத்துகின்ற சட்டத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும்.
எதிர்பார்க்கப்படும் செலவினங்களை மட்டுப்படுத்துதல் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து ஆராயப்பட்டுவருவதுடன் தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்களைக் கண்காணிக்கும் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றுக்கிடையிலான கலந்துரையாடல்களுக்கு அமைவாக பல்வேறு வரைபுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இறுதி வரைபு குறித்து இரு சந்தர்ப்பங்களில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனவே தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் நீங்கள் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற விரிவான திருத்தங்களின் ஆரம்பமாக மேற்படி வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து, அதனை நிறைவேற்றிக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.