சர்வதேச நாணயநிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த வரிக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன
அரசாங்கத்தின் புதியவரிக்கொள்கை காரணமாக தொழில்சார் நிபுணர்கள் புலம்பெயர்வது அதிகரித்துள்ளது இதன் காரணமாக சுகாதார துறையும் ஏனைய துறைகளும் மோசமாக பாதிக்கப்படலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணயநிதியத்தின் கொள்கை மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த வரிக்கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை மறைப்பதற்கு எதுவுமில்லை அது தெளிவான விடயம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரிதஅலுத்கே தெரிவித்துள்ளார்.
இல்லாவிட்டால் அரசாங்கம் பெறும் தவறை செய்யுமா என கேள்வி எழுப்பியுள்ள அவர் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக எவ்வாறான ஆர்ப்பாட்டங்களை சந்திக்க நேரும் என்பது அரசாங்கத்திற்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வரிகொள்கை குறித்து ஆராய்ந்தவர்கள் சர்வதேச நாணயநிதியத்தின் அழுத்தங்கள் காரணமாகவே இந்த கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளனர் இந்த வரிக்கொள்கைகள் காரணமாக நாடு கற்காலத்தி;ற்கு செல்லுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் பொறியியலாளர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் தென்பகுதியில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் இந்த நிலை காணப்படுகின்றது – பல மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் இதன் காரணமாக பல மருத்துவமனைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன தொழில்சார் நிபுணர்களின் குடும்பங்களிற்கு அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதே சிறந்த முடிவாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.