வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார்.
அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், போதைவஸ்து தொடர்பாக காவல்துறை, இராணுவம்,கடற்படை ஆகிய மூன்று தரப்பிடமே நாணயக்கயிறு காணப்படுகிறது. போதை வஸ்தை கொண்டுவர அனுமதிப்பவர்களும் அதனை கொண்டு வருபவர்கள், விற்பவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் அவர்களே காணப்படுகின்றனர்.
போதைப் பொருள் வியாபாரிகளை பொலிசார் கைது செய்வதில்லை. பெருந்தொகையான கஞ்சா இங்கு கடத்தப்படுகின்றது என்றால் அதனை தடுக்கின்ற வல்லமை கடற்படையிடம் உள்ளது.
பொலிஸ் இராணுவம் இங்கு குவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள படைகளில் ஏறத்தாழ 70 சதவீதமானவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கண்காணித்து போதைப்பொருள் பாவனை தொடர்பில் எச்சரிக்கையுடன் செயல்படுவதுடன் மதகுருமார்கள் மதஸ்தலங்கள் ஊடாக போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
வடகிழக்கில் உள்ள பெற்றோர், மதகுருமார், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படும்போதே போதைப்பொருள் பாவனையை தடுக்கமுடியும் – என்றார்.