உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வடக்கில் கட்டுப்பணத்தை செலுத்திய கட்சிகள்

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்றைய தினம் (12) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

அதற்கமைவாக, வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழரசுக்கட்சி இன்றைய தினம் (12) மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையிலான குழுவினர் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்காக இலங்கை தமிழரசு கட்சி கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

அதேநேரம், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணத்தையும் இலங்கைத் தமிழரசுக்கட்சி செலுத்தியுள்ளது.

அதேநேரம், உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் செலுத்தியுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட தேசிய மக்கள் சக்தி இன்றைய தினம் (12) மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது