புதிய கடற்றொழில் சட்டத்தை எதிர்க்கும் வடக்கு மீனவர்கள்

ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நாணய நிதியமும் இணைந்து புதிய கடற்றொழில் சட்டமூலம் ஒன்றினை தயாரித்து அதனை அதிகாரிகளுடன் இணைந்து நடைமுறைப்படுத்துவதற்கு முயல்வதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

‘அதில் கடற்றொழிலாளர்களுக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இல்லத்தில் இன்றையதினம் (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையின் கடற்தொழில் திணைக்களத்தின் அதிகாரிகளும், இலங்கையினுடைய கடற்தொழில் அமைச்சரும் கடல் தொழிலாளர்களுக்காக கொண்டுவரப்பட இருக்கின்ற புதிய சட்ட திருத்தம் தொடர்பாக ஊடக சந்திப்பு ஒன்றினை கொழும்பிலே நடாத்தினர்.

‘இதன்படி, புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கின்ற அந்த புதிய சட்ட திருத்தம் தொடர்பாக நேற்றைய தினம் (11) திணைக்களத்தினுடைய தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களும், அந்த செயல்பாடும் வடக்கு கடற்றொழில் சமூகத்தை பொறுத்த அளவில் கவலை அளிக்கிறது’ என்று வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

‘புதிதாக கொண்டு வர இருக்கின்ற சட்டத்தில் என்ன இருக்கிறது என்பது தொடர்பாக இதுவரைக்கும் வடமாகாணத்தில் இருக்கின்ற எந்த கடற்றொழில் சங்கங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை’.
‘குறிப்பாக 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அமைச்சர் சந்திரசேகருடன் பேசுகின்ற போது புதிய சட்டத்திருத்தத்தை எங்களுக்கு காண்பிக்குமாறு கூறியிருந்தோம்’.
‘ஆனால் இன்று வரைக்கும் அது சமர்ப்பிக்கப்படவில்லை’ என்று வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் ஊடகப் பேச்சாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.

‘இந்த சட்டம் கடற்றொழிலாளர்களுக்காக கொண்டுவரப்படுகிறதா? அல்லது சர்வதேச நாணய நிதியம் உட்பட வெளிநாடுகளின் விருப்பத்திற்காக கொண்டுவரப்படுகின்ற சட்டமா? என்ற கேள்வி எழுகின்றது’ அன்னலிங்கம் அன்னராசா குறிப்பிட்டுள்ளார்.