இலங்கைத் தீவின் பல்லின, பல்சமயக் கட்டமைப்பில் மலையகத் தமிழர்கள் எனப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்காலத்தில், தென்னிந்தியாவிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களாக இலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ போன்ற மாகாணங்களின் தேயிலை, இறப்பர் தோட்டப் பணிகளுக்காக அழைத்து வரப்பட்டவர்களின் சந்ததியினரே இவர்களாவர்.
தங்களது வியர்வையையும் குருதியையும் சிந்தி, இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தேயிலைத் துறையை இந்நாட்டிற்குப் பரிசளித்த இச்சமூகம், இருநூறு ஆண்டுகள் கடந்தும் இன்னும் பல அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின் றமை ஒரு வரலாற்று முரண்பாடாகும். அண்மையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர், இலங்கைக்கான அவுஸ் திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த்தை (Matthew Duckworth) சந்தித்து கலந்துரையாடிய நிகழ்வு, மலையக மக்களின் சமகாலப் பிரச்சினைகளை மீண்டும் ஒருமுறை சர்வதேச மற்றும் தேசிய தளங்களில் பேசுபொருளாக்கியுள் ளது.
மலையகத் தமிழர்களின் வரலாறு என்பது வெறும் உழைப்பின் வரலாறு மட்டுமல்ல, அது தொடர்ச்சி யான அடக்குமுறைகளுக்கும், அதற்கெதிரான உரிமைப் போராட்டங்களுக்கும், உயிர்வாழ்விற்கான தியாகங்களுக் கும் சான்றாகும். நீண்ட காலமாக இச்சமூகம் ‘தோட்டத் தொழிலாளர்கள்’ அல்லது ‘இந்திய வம்சாவளித் தமிழர்கள்’ என்றே அடையாளப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்று இச்சமூகம் வெறும் தோட்டத் தொழிலாளர் என்ற குறுகிய வட்டத்திற்குள் சுருங்கிவிடவில்லை. இந்த விடயம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட குழுவினர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் முக்கிய விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக “மலையகத் தமிழ் சமூகம் இனிமேலும் அதன் வரலாற்றுப் பின்னணியான ஒப்பந்தத் தொழிலாளர் என்ற ஒற்றைக் கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்கப்படக் கூடாது. அவர்கள் இன்று இலங்கையின் நான்காவது பெரிய தேசிய இனமாக, தமக்கே உரிய பிரத்தியேக அடையாளத்துடன் பரிணமித்துள்ளனர்.” என்று அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். “இன்று மலையக இளைஞர்கள் கல்வி, வர்த்தகம், அரச மற்றும் தனியார் துறைகள், கலை, அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்து வருகின்றனர். எனவே, இவர்களை வெறும் ‘தோட்டத் தொழிலாளர்கள்’ எனக் கருதுவது அவர்களின் ஒட்டுமொத்த சமூக வளர்ச்சியை நிராகரிப்பதாக அமையும்” என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, மலையக மக்களின் குடியுரிமைப் போராட்டம் மற்றும் தற்போதைய அரசியல் நிலை என்பன தொடர்பாகவும் இதன்போது அவதானம் செலுத்தப் பட்டுள்ளது. “மலையக மக்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட காலம் தொட்டே இந்நாட்டின் குடிமக்களாக வாழ்ந்த போதிலும், 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தவுடன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் மிகக் கொடூரமானது. 1948ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க இலங் கைக் குடியுரிமைச் சட்டம் மற்றும் 1949ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல் (திருத்தச்) சட்டம் ஆகியவற்றின் மூலம், மலையக மக்களின் குடியுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட்டன. ஒரே இரவில் சுமார் 10 இலட்சம் மக்கள் ‘நாடற்றவர்களாக’ மாற்றப்பட்டனர்.
இது இலங்கையின் ஜனநாயக வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாகும். பின்னர், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் (1964) மற்றும் சிறிமா – இந்திரா காந்தி ஒப்பந்தம் (1974) ஆகியவற்றின் மூலம் லட்சக்கணக்கான மலையக மக்கள் கட்டாயமாக இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். எஞ்சியவர்களுக்கு நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின்னரே, 1980களின் பிற்பகுதியிலும் 2003ஆம் ஆண்டின் சிறப்புச் சட்ட மூலமும் முழுமையான குடியுரிமை வழங்கப் பட்டது” என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குடியுரிமை மற்றும் வாக்குரிமை சட்டப்பூர்வமாகப் பெறப்பட்ட போதிலும், சமத்துவக் குடியுரிமை என்பது இன்னும் முழுமையாக எட்டப்பட வில்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியினர் தெரி வித்துள்ளனர். மலையகத் தலைமைகள் இன்று வலியுறுத்து வது வெறும் சட்ட ரீதியான குடியுரிமையை மட்டுமல்லாது தேசிய அபிவிருத்தியில் சமமான பங்குடமை, அரச நிர்வாகக் கட்டமைப்பில் முறையான பிரதிநிதித்துவம் மற்றும் பின்தங்கிய மலையகப் பிரதேசங்களுக்கான தனியான அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவும் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ள னர்.
குறிப்பாக காணி உரிமை விடயத்தில் நிலவும் சிக்கல்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மலையகத் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் மிக அடிப்படையான மற்றும் நீடித்த பிரச்சினை காணி உரிமை மற்றும் பாதுகாப்பான வீட்டு வசதியின்மையாகும். தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் பிரித்தானியர் காலத்தில் கட்டப்பட்ட ‘இலயங்கள்’ (Lines) எனப்படும் 10×10 அடி அளவுள்ள குறுகிய அறைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மலையக மக்கள் சார்ந்து ஒத்துழைப்பை வழங்குமாறு பின்வரும் கோரிக்கைகள் தமிழ் முற்போக்கு கூட்டணியினரால் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.
1. வீட்டுப் பாதுகாப்பு
2. சமூக நடமாட்டம் மற்றும் அந்தஸ்து
3. வாழ்வாதார மேம்பாடு
4. முகவரி மற்றும் சட்டபூர்வ அடையாளம்
அதேநேரம் பாதுகாப்பான நிலவுரிமை இல்லாததன் காரணமாக மலையக மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. மலையக மக்கள் வாழும் நிலங்கள் அனைத்தும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அல்லது அரசாங்கத்திற்குச் சொந்த மானவையாகும்.
இதனால், தங்களுக்கு என ஒரு துண்டு நிலத் தையோ அல்லது வீட்டையோ சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. காணி உரிமை இல்லாததால் உள்ளூராட்சி மன்றங்களினால் வழங்கப்படும் வீதி, மின்சாரம், நீர் போன்ற அடிப்படை வசதிகளைத் தடையின்றிப் பெற முடிவதில்லை. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தலா 7 பேர்ச் காணி வழங்கி, தனிவீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டங்கள் கடந்த அரசாங்கங்களால் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவை இன்னும் மந்தகதியிலேயே சாத்தியமாகியுள்ளன.
தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் வலியுறுத்தியது போல, காணி உரிமை என்பது வெறும் தங்குமிடம் சார்ந்தது மட்டுமல்ல, அது சமூகப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு அவசியமான ஒரு பிரதான காரணியாகும். அதேபோன்று மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்கள் மலையக மக்களுக்கு பாரிய சவாலாக உள்ள நிலையில் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) இலங்கையில் மண்சரிவு அபாயப் பகுதிக ளைக் கண்டறிந்து, டிஜிட்டல் வரைபடமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் நவீனமயமாக்கலுக்கு அவு ஸ்திரேலிய அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் இந்தச் சந்திப்பின் போது அவுஸ்திரேலியாவின் இந்த உதவிக்குத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தப்பட்ட தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அமைப்பின் மூலம், இடம்பெயர்ந்த மக்களுக்கான பாதுகாப்பான நிலங்களை விரைவாகக் கண்டறிந்து, மீள்குடியேற்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் மலையக மக்கள் எதிர்நோக்கும் சமூக, கல்வி மற்றும் பொருளாதார சவால்கள் தொடர்பாகவும் வேதனம் சார்ந்த போராட்டங்கள் தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. குறிப்பாக மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகளில் அவுஸ்திரேலியாவினால் வழங்கக்கூடிய உதவிகளை பெற்றுத்தர தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ் முற்போக்கு கூட்டணியினர் அவுஸ் திரேலிய உயர்ஸ்தானிகரிடம் முன்வைத்த ஒரு முக்கிய அரசியல் பொறிமுறைதான் ‘தேசியத் தமிழ் சமூகப் பேரவை’ ஆகும். பிராந்திய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அப்பால், நாட்டின் ஏனைய மாகாணங்களில் (மத்திய, ஊவா, மேல், சப்ரகமுவ, தென் மாகாணங்கள்) சிதறி வாழும் தமிழ் மக்களின் நலன்களைப் பேணுவதற்காக முன்மொழியப்பட்ட ஒரு கட்டமைப்பாகும்.
இப்பேரவையானது பாராளுமன்றத்துடனும் அரசாங்கத்துடனும் முறையான கொள்கை ரீதியான ஈடு பாட்டை மேற்கொள்வதற்கும், மலையக மக்களின் பிரத்தி யேகத் தேவைகளைச் சட்டப்பூர்வமாகப் பிரதிநிதித் துவப் படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்ற விடயம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதார செழுமைக்காகத் தங்களின் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு உன்னதமான சமூகமாகும். அவர்கள் இன்னும் ‘தோட்டத் தொழிலாளர்கள்’ என்ற அடைமொழிக்குள்ளேயே முடங்கிக் கிடக்காமல், நாட்டின் சமத்துவமுள்ள குடிமக்களாக மாற வேண்டுமாயின், காணி உரிமை, முறையான வீட்டு வசதி, தரமான கல்வி மற்றும் தடையற்ற பொருளாதார வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
தமிழ் முற்போக்குக் கூட்டணி அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் நடத்திய இந்தச் சந்திப்பானது, மலை யக மக்களின் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இலங்கை அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் அதேவேளையில், மலையக மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கும், அரசியலமைப்பு ரீதியான தீர்வுகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். அப்போதுதான் உண்மையான நல்லி ணக்கமும், தேசிய அபிவிருத்தியும் சாத்தியமாகும்.



