பலூச் விடுதலைப் படையினர் நடத்திய தொடருந்து கடத்தல் சம்பவம் 30 மணி நேரத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்ததாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. இதில் தொடருந்தில் இருந்த பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“குவெட்டாவில் இருந்து பெஷாவார் நோக்கிச் சென்ற ஜாபர் எக்ஸ்பிரஸ் தொடருந்தை பலூச் விடுதலைப் படையினர் வெடிவைத்து தடம்புரளச் செய்து பின்னர் கடத்தினர். இந்தத் தாக்குதல், கடத்தல் சம்பவத்துக்குப் பின்னால் ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாதக் கும்பல்கள் இருப்பதை உளவுத் துறை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அரசு இத் தாக்குதல் போன்று பாகிஸ்தானுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகள் அதன் மண்ணில் அரங்கேறாமல் தவிர்க்கும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
தீவிரவாதிகளுடன் சண்டை தொடர்ந்த நிலையில், 30 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் ரயில் பயணிகளில் 21 பேரும், பாதுகாப்புப் படையினர் 4 பேரும் உயிரிழந்தனர். தற்கொலைப் படை தீவிரவாதிகள் உள்பட 33 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.” என்று தெரிவித்துள்ளது.