வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி வெற்றி பெற்றது ஆனால் அங்கு இன்றளவிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று புதன்கிழமை (08) நாடாளுமன்ற கேள்வி பதில் நேரத்தின் போது உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி வெற்றி பெற்ற போதிலும், அங்கு இன்றளவிலும் பல காணிகள் விடுவிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும், பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நீண்டகாலமாக இராணுவம் நிலைகொண்டிருப்பதும், சாதாரண சிவிலியன் நிர்வாகத்தைத் தாமதப்படுத்துவதுடன், நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளையும் பலவீனப்படுத்துகிறது.
உண்மையான தேசிய பாதுகாப்புத் தேவைகள் தவிர, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு நிகரான அளவிற்கு இராணுவப் பரவலாக்கம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படுவதும், இராணுவமயமாக்கல் நீக்கப்படுவதும் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் மற்றும் பொருளாதார மீட்சி ஆகியவற்றிற்கு அவசியமானவையாகும். பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் நான் முன்வைத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் இரண்டு இராணுவ முகாம்கள் விடுவிக்கப்பட்டதை நான் வரவேற்கும் அதேவேளையில், நிலங்கள் விடுவிக்கப்படும் வேகம் மந்தமாக இருப்பதற்கு எதிராகப் பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.



