பாலச்சந்திரன் படுகொலை – இந்திய இராணுவத்தை குற்றம் சாட்டும் பொன்சேகா?

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன் இறுதியாகக் காணப்பட்ட பதுங்கு குழியில், அவருடன் இந்திய இராணுவத்தின் சீருடை அணிந்தவர்களே காணப்பட்டனர். பிரபாகரனின் குடும்பத்தில் எவருமே அப்பாவிகள் கிடையாது. அனைவரும் பயங்கரவாதிகளே. பாலச்சந்திரன் கூட சிறுவர் படையணியில் கட்டளையிடும் அதிகாரியாக இருந்தவர்.”

இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நிதி திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன், தனது மக்களுக்காக உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாகி திலீபன் ஒசாமா பின்லேடனா? அல்லது 12 வயது சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட், தண்ணி கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றவர்கள் பின்லேடன்களா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து எழுந்த சர்ச்சையின்போதே மேற்கண்டவாறு தெரிவித்த  மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் கூறுகையில்,

பாலச்சந்திரனை படுகொலை செய்தது இலங்கை ராணுவம்தான்: ஐநா அறிக்கை | Srilankan  Army Killed Balachandran - UN Report

“பிரபாகரனும் அவரின் மூத்த மகனும் கொல்லப்பட்டது மட்டுமே இராணுவத்துக்குத் தெரியும். அவர்கள் இருவரினதும் உடல்களை மட்டுமே நாம் மீட்டோம். அவரின் குடும்பத்திலுள்ள மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் கே.பி. சொல்லியுள்ளார்.

பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன் ஒரு பதுங்கு குழியில் இருக்கும் படமே இறுதியாக வெளியானது. அதில் அவருக்கு அருகில் நிற்போர் இந்திய இராணுவத்தின் சீருடையையே அணிந்திருந்தனர். இது காட்டுச் சீருடை. இதனை எமது இராணுவத்தினர் அணிவதில்லை. ஆனால், தமிழீழ விடுதலைப்புலிகள் இவ்வாறான சீருடைகளைத்தான் அணிவார்கள்.

பிரபாகரனின் மனைவிதான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் விநியோகப் பிரிவுக்குப் பொறுப்பானவர். மூத்த மகன் கேணல், மகள் பெண்கள் படைப்பிரிவின் மேஜர்.

கடைசி மகனான பாலச்சந்திரன் சிறுவர் படையணியின் கட்டளையிடும் அதிகாரி. எனவே, பிரபாகரனின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒன்றும் அப்பாவிகள் அல்லர். அனைவருமே பயங்கரவாதிகள்தான்.

அதேவேளை, பாலச்சந்திரன் தொடர்பாக வெளியான படத்தில் அவர் சாரத்தைப் போர்த்தியவாறு காணப்படுகின்றார். ஆனால், நாம் அவரைப் பிடித்திருந்தால் நல்ல ஆடைகளையே வழங்கியிருப்போம். எனவே, படையினரைப் பற்றி தேவையற்ற கதைகளைக் கதைக்கக் கூடாது”  என எச்சரித்தார்.