மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் 10ஆவது கூட்டத்தை நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று (10) புறக்கணித்தனர்.
நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான தீவிரத்தையும் அவசரத்தையும் தெரிவுக்குழு வெளிப்படுத்தத் தவறி வருவதால் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.
ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் நிசாம் காரியப்பர் ஆகிய நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் தமது கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய கூட்டத்தில், நான்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில் கருத்துரைத்த சாணக்கியன், பத்து கூட்டங்கள் நடைபெற்றுள்ள போதிலும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதால், இத்தகைய செயன்முறைக்கு இனியும் ஆதரவளிக்க முடியாது என்று தெரிவுக்குழுவிடம் தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான நடைமுறைத் தீர்வுகள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போதுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான தெளிவான முன்மொழிவொன்றை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே முன்வைத்துள்ளது.
அதில் பெண்களுக்கு 25 சதவீத உத்தரவாத பிரதிநிதித்துவத்தை வழங்குவதற்கான ஏற்பாடும் உள்ளடங்கியுள்ளது.
அதேவேளை, மற்றுமொரு சட்டரீதியான வழிமுறையும் பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது.
தனிநபர் சட்டமூலம் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட யோசனை பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ளது.
பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் இணங்கினால், அந்தச் சட்டமூலத்தை முன்னெடுத்து மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான சட்டரீதியான ஏற்பாடுகளை உருவாக்க முடியும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தனது 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்திற்குள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவதாகத் தெளிவாக உறுதியளித்திருந்தது.
மாகாண சபைகள் பல ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகளின்றி இயங்கி வருகின்றன.
இதன் மூலம் தமது பிரதிநிதிகளை ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யும் மக்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலைமை மேலும் தொடர அனுமதிக்க முடியாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.



