இலங்கை: உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கூடாது எனக் கருத்து முன்வைப்பு

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீட்டித்திருப்பதை இரத்துச் செய்து, உடனடியாக உள்ளூராட்சி சபைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல கோடி ரூபாய் நிதியை மீதப்படுத்த முடியும் எனவும் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் இருக்கின்றன. இதில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த 2018ஆம் ஆண்டிலும், எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டும் நடைபெற்றன.

இதற்கமைய மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள், கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுக்கு வந்தன. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.

உள்ளூராட்சி சபைகள் அனைத்திலும் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 845 பேர் மாநகர சபை உறுப்பினர்கள், 483 பேர் நகர சபை உறுப்பினர்கள், 7,362 பேர் பிரதேச சபை உறுப்பினர்களாவர்.

நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் 223 சபைகளின் அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், இந்த சபைகளின் பதவிக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளின் கூட்டங்கள் சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும், தேவையேற்படும்போது விசேட கூட்டங்களும் நடத்தப்படும். மாநகர சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதன் உறுப்பினர்களுக்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழக்கப்படுகிறது. மாநகர சபையின் முதல்வருக்கு 30 ஆயிரம் ரூபாவும் பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

இதே வேளை நகர சபை மற்றும் பிரதேச சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. மேலும் இவற்றின் தவிசாளர்களுக்கு (தலைவர்கள்) 25 ஆயிரம் ரூபாவும், பிரதித் தவிசாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் கிடைக்கின்றது.

எனவே, தற்போது நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை இரத்துச் செய்து – அவற்றினைக் கலைத்து விட்டால், பதவி நீட்டிக்கப்பட்டுள்ள காலத்துக்காக அந்த சபைகளின் உறுப்பினர்களுக்கு, வழங்கப்படவேண்டிய கொடுப்பனவு கிட்டத்தட்ட 152 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்  எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஒவ்வொரு சபைக் கூட்டங்களையும் நடத்துவதற்கான வேறு செலவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது.

நன்றி -பிபிசி தமிழ் Tamil News