அரசுக்கு ஒருவார கால கெடு : அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவிப்பு

வைத்திய அதிகாரிகள் முன்வைத்துள்ள 5  பிரதான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறும் பட்சத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் தீவிர தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராகவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் அன்பாஸ் பாரூக் தெரிவித்தார்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் வியாழக்கிழமை (19) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வைத்தியர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தின் பின்னர், எமது சங்க உறுப்பினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனையடுத்தே இன்றய தினம் அவசர மத்திய குழுக் கூட்டம் நடைபெற்று, அதில் ஐந்து பிரதான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. வரவு – செலவுத் திட்டத்தின் முதலாம் வாசிப்பு இடம்பெற்றுள்ள நிலையில், மூன்றாம் வாசிப்புக்கு முன்னர் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் வைத்தியர்களுக்கும் பொருளாதார நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

நாட்டின் பொருளாதாரம் தற்போது வளர்ச்சியடைந்து, ஸ்திரமடைந்துள்ளதாக ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினரே குறிப்பிட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட எமது கொடுப்பனவுகளை மீள வழங்குமாறு நாங்கள் கோருகிறோம். அந்த வகையில், டெட் கொடுப்பனவுக்காக  2018ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்ட 120,000 ரூபா  கொடுப்பனவுக்குப் பதிலாக, இன்றுவரை 70 ஆயிரம்  ரூபா மாத்திரமே வழங்கப்படுகின்றது. அகையால் ஏற்கனெவே அங்கிகரிக்கப்பட்ட தொகை வழங்கப்பட  வேண்டும்.

கடந்த இரண்டு வருடங்களாக வைத்தியர்களின் மேலதிக சேவைக் கொடுப்பனவு மற்றும் விடுமுறைக் கொடுப்பனவுகளின் மூன்றில் ஒரு பகுதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைத்தியர்கள் மாத்திரம் சுமார் 4,400 கோடி ரூபாவை  தியாகம் செய்துள்ளனர். பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ள நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூன்றில் ஒரு பகுதி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு கோருகிறோம்.

தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அநீதியான வரிச்சுமையிலிருந்து, போக்குவரத்து மற்றும் டெட் கொடுப்பனவுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டும்.  22/99 சுற்றறிக்கையின் கீழ் வழங்கப்படும் போக்குவரத்துக் கொடுப்பனவை, நாடு முழுவதும் சேவையாற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கும் வழங்குமாறு வலியுறுத்துவதோடு, வரி விலக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரத்தை வைத்தியர்களுக்கு மீண்டும் வழங்குமாறு கோருகிறோம்.

இந்த ஐந்து கோரிக்கைகளுக்கும் சாதகமான பதில்கள் கிடைக்கப்பெறாத பட்சத்தில், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவதற்கு ஏகமனதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  நெருக்கடி காலங்களில் முன்னின்று உழைத்த சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு உரிய நியாயத்தை வழங்குவதில் அரசாங்கம் பின்வாங்கக் கூடாது என்றார்.