இராணுவச் செலவினங்கள் மற்றும் ஆயுத மோதல்களைத் தவிர்த்து, அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, பகிரப்பட்ட சௌபாக்கியம் மற்றும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (19) இலங்கைப் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ‘இன்டர் பாரேஸ்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அனைவருக்காகவும் செயல்படும் பாராளுமன்றத்தை உருவாக்குதல் – பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய சர்வதேச பயிலரங்கில்” சிறப்புரை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் சனத்தொகையில் ஏறக்குறைய 51 முதல் 52 வீதமானோர் பெண்களாக இருந்தபோதிலும், பாராளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் 9.8 வீதமாக மாத்திரமே காணப்படுகின்றன.
பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கிராமப்புற, பெருந்தோட்ட மற்றும் நகர்ப்புறப் பெண்களின் நல்வாழ்வு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்குவது என்பது வெறும் நலன்புரித் திட்டங்களுக்கு அப்பால் சென்று, அவர்களின் கௌரவம், சம உரிமை மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வதாக அமைய வேண்டும்.
பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வலுவான பாராளுமன்றப் பொறிமுறையும், குறிப்பாக இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியமும் அவசியம் .
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கொவிட்-19 பெருந்தொற்று, பொருளாதார வீழ்ச்சி, ‘டிட்வா’ சூறாவளி மற்றும் தற்போதைய மத்திய கிழக்குப் போர்ச்சூழல் எனக் கடந்த ஏழு ஆண்டுகளில் இலங்கை எதிர்கொண்ட சவால்களை நினைவுகூர்ந்த அவர், உலகளாவிய அதிர்ச்சிகளால் அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரங்கள் எளிதில் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் பிராந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக்காட்டிய அவர், 2024ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 42 வீதம் மேல் மாகாணத்திலிருந்தே பெறப்பட்டதாகவும், எஞ்சிய 58 வீதமே ஏனைய எட்டு மாகாணங்களாலும் பகிரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
மோதலை விட ஒத்துழைப்புக்கும், போரை விடச் சமாதானத்திற்கும் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச சமூகம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வறுமை, வேலையின்மை மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவற்றைத் தீர்க்கக் கூடிய வளங்களை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நல்லாட்சிக்கு வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை வகுப்பு அவசியம் எனக் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சர்வதேச சமூகம் தமது வாக்குறுதிகளை அர்த்தமுள்ள செயல்பாடுகளாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.



