சர்வதேசத்திற்கு நல்ல பெயரை காட்டுவதற்கு ஒர் அறிக்கையையும் மற்றோரு புறத்தில் நினைவுகூரலை தடுப்பதற்கு விசாரணைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருவதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக வெள்ளிக்கிழமை (20) விசாரணைக்கு சென்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்
சுமார் ஒன்றரை மணி நேரங்கள் விசாரணை நடைபெற்றது. கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி மாலதி அக்காவினுடைய நினைவு தினம் செய்தமை தொடர்பாக ஒரு விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் ஆரம்பத்தில் தங்களுக்கு கொழும்பிலிருந்து இந்த விசாரணையை நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடைய தடை செய்யப்பட்ட சீருடை அணிவிக்கப்பட்ட படம் ஒன்றை வைத்து அஞ்சலி செலுத்தியிருப்பதாகவும், அது தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு தங்களுக்கு பணிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார்கள்.
இதன்போது நான் மிகத் தெளிவாக சொல்லியிருந்தேன்: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரிச்சீருடையுள்ள அல்லது இலங்கை அரசாங்கத்தினாலே தடை செய்யப்பட்ட அடையாளங்களைக் கொண்ட புகைப்படங்கள் எதற்கும் நாங்கள் அஞ்சலி செலுத்தவில்லை.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுடைய அடையாளங்களோடு புலிகளை மீளுருவாக்குகின்ற நோக்கத்தோடு இந்த நினைவேந்தல் நடந்திருக்கிறது, இதைப் பற்றி விசாரிக்குமாறு அவர்கள் இங்கே அறிக்கை அனுப்புகிறார்கள் என்று சொன்னால், இது தொடர்பாக வந்து அரசாங்கம் ஒரு விசாரணை நடத்த வேண்டும்.
அப்படி இல்லாமல் வந்து இவ்வாறு ஒருபுறத்திலே அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு நல்ல பிள்ளையாக நடிப்பதற்காக, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நிதி உதவிகளைப் பெறுவதற்காக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்தும் ஏனைய சர்வதேச ஐ.நா அமைப்புகளிடமிருந்தும் தங்களுக்கு ஒரு நற்பெயரை ஈட்டிக் கொள்வதற்காக தாங்கள் இந்த சட்டங்களை மதித்து நடக்கிறோம், அடிப்படை உரிமைகளை தாங்கள் அங்கீகரித்திருக்கிறோம் என்று ஒரு பக்கத்திலே பொய்களைச் சொல்லிக்கொண்டு, மறுபுறத்திலே தங்களுடைய அரச இயந்திரத்தைப் பயன்படுத்தி எங்களை நெருக்கடிக்குள் தள்ளுகிற, அச்சுறுத்துகிற, எங்களுடைய அடிப்படை உரிமைகளை மறுக்கிற செயல்பாடுகளை வந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆகவே இந்த விசாரணை, இந்த அறிக்கை – நாங்கள் ஒரு வரி உடுப்போடு இருந்த ஒரு படத்திற்கு அஞ்சலி செலுத்தியதாக அறிக்கை தயாரித்து அனுப்பிய அந்த அதிகாரியை இடைநிறுத்தி, அவருக்கு எதிராக அது தொடர்பான ஒரு முழு விசாரணை நடத்தி அவர் தண்டிக்கப்பட வேண்டும், அவர் வேலையிலிருந்து நீக்கப்பட வேண்டும். உண்மையிலேயே அனுர அரசாங்கம் வந்து ஒரு பக்கச்சார்பற்று நடக்கிறது என்றது உண்மையாக இருந்தால் இது செய்யப்பட வேண்டும். இல்லை என்று சொல்லி சொன்னால் அனுர குமார திசாநாயக்க தான் இந்தத் தமிழர்களுடைய இந்த நினைவேந்தல் உரிமைகளை மறுப்பதற்காக திட்டமிட்டு வந்து தன்னுடைய தலைமையின் கீழ் இருக்கக்கூடிய இந்த பொலிசாரையும் உளவுத்துறையையும் இவ்வாறு பயன்படுத்துகிறார் என்ற முடிவுக்குத்தான் நாங்கள் வரவேண்டியிருக்கும் என்றார்.



