‘மே’ நாளில்…’புவிப் பரப்பெங்கும் தொழிலாளர்களும் ஒடுக்குண்ட மக்களும்….’

‘பன்னாட்டுலகப் பாட்டாளிகளின் போராட்டத் திருநாளாகிய இந்த (2022) மேநாளில்…புவிப் பரப்பெங்கும் தொழிலாளர்களும் ஒடுக்குண்ட மக்களும்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அதில்,

  • குமுக விடுதலைக்காகவும் தேசிய விடுதலைக்காகவும்
  • போர்களற்ற உலகிற்காகவும்
  • பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்காகவும்

நடத்தி வரும் போராட்டங்களில் —

தமிழ்த் தேசத் தொழிலாளர் வகுப்பு தோழமை கொள்கிறது.

இன்றைய மாந்தக் குலம் சந்திக்கும் முதற்பெரும் அச்சுறுத்தலாக மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து இருந்து வருகிறது. பன்னாட்டுச் சட்டங்களைத் துச்சமாய்க் கருதி உக்ரைன் மீது உருசிய வல்லரசு தொடுத்துள்ள போர் மூன்றாம் உலகப் போராக முற்றி வெடிக்கும் ஆபத்துள்ளது. மறுபுறம் உருசிய எதிர்ப்பின் பேரில் நேட்டோ இராணுவக் கூட்டணியை விரிவாக்கி, உருசிய மக்கள் மீது பொருளியல் முற்றுகையைத் திணித்து, ஐரோப்பாவில் படைக்கலன்களைக் கொட்டிக் குவித்து கொள்ளை இலாபம் ஈட்டி வரும் அமெரிக்க வல்லரசின் நடவடிக்கைகள் உலக அமைதிக்கு உலைவைத்துக் கொண்டிருக்கின்றன. மூன்றாம் உலகப் போர் அணு ஆய்தப் போராகத்தான் இருக்கும் எனில் நம்மால் எண்ணிப் பார்க்கவும் இயலாத பேரழிவு நிகழக் கூடும்.

புவி வெப்பமாதலாலும் காலநிலை மாற்றத்தாலும் உலகம் பேரழிவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இந்தப் பேரழிவைத் தடுப்பதற்கான முயற்சிகள் பணம்படைத்த நாடுகளின் முதலாளர்தம் இலாப வேட்டையால் தொடர்ந்து தடைப்பட்டுக் கிடக்கின்றன. இந்த அழகான உலகம் நம் கண்முன்னால் அழியப் போகிறது; இல்லை, இப்போதே அழிந்து கொண்டுதான் இருக்கிறது. சென்னை போன்ற நகரங்கள் கடலில் மூழ்கும் ஆபத்து குறித்து சூழலியல் அறிவியலர்கள் எச்சரித்துள்ளார்கள். அனைத்து மக்களிடமும் சூழலியல் விழிப்புண்டாக்கி உலகை அழிவிலிருந்து காக்கும் கடமை தொழிலாளர் வகுப்புக்கு உண்டு.

கொரோனா நோய்த் தொற்றின் உயிர்வேட்டை இன்னும் முடியவில்லை என்று உலக நலவாழ்வு அமைப்பு எச்சரித்துள்ளது. தொற்றுநோய்க் காலத்திலும் இந்தியப் பெருமுதலாளர்களின் கொள்ளை ஓயவில்லை. அவர்கள் உலகப் பெரும் பணக்காரர்களின் வரிசையில் மேலேறிச்சென்று கொண்டிருக்கின்றார்கள். வேலையின்மையும் பணவீக்கமும் விலையேற்றமும் பசிபட்டினியும் உழைக்கும் மக்களின் வாழ்வைத் துயரப் படுகுழியில் தள்ளி விட்டுள்ளன. இந்தியாவில் நரேந்திர மோதி தலைமையிலான பாசக அரசு பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்தித் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது. இத்துணை நெருக்கடியிலும் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வெற்றி கண்ட உழவர்கள் நமக்கு நம்பிக்கை ஊட்டுகின்றார்கள்.

இலங்கைத் தீவில் இராசபட்சே குடும்பத்தின் பாசிச ஆட்சிக்கு எதிராக சிங்களர் உட்பட அனைத்துப் பிரிவு மக்களும் கிளர்ந்தெழுந்து போராடி வருகின்றார்கள். இனவழிப்புக்கு நீதிகோரும் தமிழ்மக்களின் போராட்டம் இலங்கையில் மட்டுமல்ல, பன்னாட்டு அரங்கிலும் முன்னேறி வருகிறது. இனவழிப்புக் குற்றவாளிகளான இராசபட்சே கும்பலை எதிர்ப்பதில் தமிழ்மக்களும் சிங்கள மக்களும் ஒன்றுபட்டிருப்பது இலங்கைத் தீவின் இரு தேசங்களுக்கும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது. ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்குத் தமிழ்நாட்டை  உறுதியான பின்தளமாக் கட்டி வளர்க்க வேண்டிய தேவை உள்ளது.

ஒன்றிய அரசு எனப்படும் இந்திய நடுவணரசு தமிழ்நாட்டின் உள்ளார்ந்த இறைமைக்கு எதிராகத் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் இந்திய அரசமைப்பில் தமிழ்த்தேசத்தின் அடிமைநிலையை வெளிப்படுத்தி வருவதோடு தமிழினம் தன் இறைமைமீட்புக்கும் விடுதலைக்குமாகப் போராட வேண்டிய தேவையையும் உணர்த்தி வருகின்றன.

இந்துத்துவ பாசிச ஆற்றல்கள் தமிழ்நாட்டில் சாதி சமய மோதல்களைத் தோற்றுவிக்கவும் தமிழ்நாட்டின் தன்னாட்சி உரிமையை மறுக்கவும் எடுத்து வரும் நச்சுத்தனமான முயற்சிகளை முறியடித்து தமிழ்மக்கள் ஒற்றுமையைக் கட்டிக் காக்கும் கடமை தொழிலாளர் வகுப்புக்கு உள்ளது. தமிழ்நாட்டில் சாதி ஆணவக் குற்றங்களும் பெண்கள்- குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் பெருகி வருவது கவலைக்குரிய செய்தி காவல் நிலையக் கொடுமைகளை எதிர்த்து விடாத் தொடர்ச்சியாகப் போராட வேண்டிய தேவையும் உள்ளது.

இழப்பதற்கு ஒன்றுமில்லாத தொழிலாளர் வகுப்பு எதிர்ப்பதற்குப் பலவும் உள்ளன என்பதை நெஞ்சிலேந்தித் தொடர்ந்து போராடுவோம் – புத்துலகம் காணும் வரை ஓயாமல் போராடுவோம்! மேநாளில் புத்தூக்கம் பெற்றுப் போராடுவோம்!

தமிழர் விடுதலைப் போர்முழக்கம்!  சமூகநீதித் தமிழ்த்தேசம்!

Tamil News