ஒடிசா தொடருந்துகள் விபத்து-உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு: அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ஒடிசா தொடருந்து விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், இரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்று இரயில்வே துறை அமைச்சர் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நேற்று (ஜூன் 2) சரக்கு தொடருந்து மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் ஒடிசாவில் தொடருந்து விபத்து நடந்த இடத்தில் இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம், ” இது ஒரு துயர்மிகு விபத்து. இரயில்வே, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு மிகச்சிறந்த உயர் சிகிச்சை தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒடிசா இரயில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரயில் பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார்” என்று கூறினார்.