‘வடக்கு மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்’- காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமிந்த திசாநாயக்க  

101 Views

‘எங்களின் போராட்டம் ஒரு மாதத்தையும் கடந்து வெற்றிகரமாக தொடர்கின்றது. இந்தப் போராட்டத்தை ஒடுக்க முற்பட்டவர்கள் இப்போது தோற்றுப் போயுள்ளார்கள். கடந்த 09 ம் திகதி எங்களது நியாயமான போராட்டத்தை சீர்குலைக்க முன்னாள் பிரதமர் மஹிந்தவின் ஆதரவாளர்கள் முற்பட்டனர்.எங்களில் பலரை பொல்லுகளால் தாக்கி காயப்படுத்தினர்.

எனினும் கலகக்காரர்களை தடுப்பதற்கு காவல்துறையினர் தவறிவிட்டனர்.இந்த நிலையில் எங்கள் இளைஞர்களை தாக்கி போராட்டத்தை கொச்சைப்படுத்துவதே  அரசுதரப்பின் நோக்கமாக இருந்தது.

இதேவேளை இச்சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாமையானது அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினையே வெளிப்படுத்துவதாக உள்ளது. இலங்கையின் பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை தாக்கியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவரை காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். எனினும் எங்களை தாக்கி எங்களது ஐக்கியத்தை சீர்குலைக்க முற்பட்டவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் அவர்களை கைது செய்வதில் தயக்கநிலையே காணப்படுகின்றது.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவோ அல்லது பிற்பகுதியிலோ இத்தகைய எழுச்சிப் போராட்டம் இடம்பெற்றதில்லை.அந்த வகையில் இப்போதைய போராட்டம் முக்கியத்துவம் பெறுகின்றது.வடக்கு கிழக்கு மக்கள் உரிமை, சமத்துவம், பொறுப்பு கூறல், வெளிப்படைத்தன்மை என்பவற்றுக்காக 30 வருடங்களுக்கும் மேலாக போராடி சோர்வடைந்துள்ளனர்.

ஆனாலும் அவர்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைக்கவில்லை என்பதனை புத்திஜீவிகள் தெரிவித்துள்ளனர்.அதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.அவர்களுக்கு உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.மக்களின் உரிமைகள் மழுங்கடிக்கப்படுவதையோ அல்லது ஒரு இனத்தை, மதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுவதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 74 ஆண்டு காலத்தில் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி நாட்டு மக்களை பிரித்தாண்ட சோக வரலாறுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம். காலிமுகத்திடல் போராட்டம் ஆரம்பிக்கப்பட நாள் முதல் அரசாங்கம் அச்ச உணர்வு டனேயே இருந்து வருகின்றது.எமது போராட்டத்திற்கு பல வெற்றிகள் கிடைத்துள்ளன.பிரதமர் மஹிந்த பதவி விலகியமை ஒரு நல்ல சகுனமாகும்.ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை“ என்றார்.

Tamil News

Leave a Reply