இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 88 வீதமானோர் டென்வி 2 (DENV-2) என்ற டெங்கு வைரஸின் இரண்டாம் வகையால் பாதித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு பரவல் நிலைமை காரணமாக இதுவரை இலங்கையில் 75,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.
டெங்கு 2 என்று அழைக்கப்படும் குறித்த வைரஸ் திரிபுக்கு எதிராக மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் வைத்தியர் குறிப்பிட்டார்.
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 53 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பதிவாகியுள்ள அந்த 53 டெங்கு மரணங்களில் 37 பேர் பெண்கள் என்றும் வைத்தியர் கன்னங்கர மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பெண்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தற்போது பதிவாகும் டெங்கு மரணங்களில் சுமார் 70 சதவீதமானோர் பெண்கள் என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கரா தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் டெங்கு நோயைக் கண்காணித்தல் மற்றும் தடுப்பது தொடர்பான மருத்துவ முகாமைத்துவ வழிகாட்டல் தொகுப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பல்கலைக்கழகங்களுக்கான வழிகாட்டல் நெறிமுறைகள் உத்தியோகபூர்வமாக நாளை (20) வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் டெங்கு நோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், நோயாளிகளை முறையாகக் கையாள்வதற்கும், நோய் கண்காணிப்பை வலுப்படுத்துவதற்கும், டெங்கு நுளம்புகள் பரவுவதைத் தடுப்பதற்கும் முறையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
அண்மைக் காலமாக டெங்கு நோய் தீவிரமாகப் பரவியதன் காரணமாக, சில பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



