சமகால அரசியல் நிலைமைகளில், சிறுபான்மை இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கியமான ஆறு கட்சிகள் புதிய அரசியல் நாடகத்திற்கான அத்தி வாரத்தைப் போட்டுள்ளன. தமிழ், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் பொது வான பிரச்சினைகள் தொடர்பாக, ஒரு பொதுத்தளத்தில் ஒன்றிணைந்து செயற்படப்போவதாக ஆறு தமிழ்ப் பேசும் அரசியல் கட்சிகள் கொழும்பில் நடத்திய கூட்டு ஊடக சந்திப்பில் உத்தியோகபூர்வமாக கடந்த திங்கட் கிழமையன்று(13-07) அறிவித்திருக்கின்றன.
வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, மலையகத் தமிழ் மக்களின் குரலாக ஒலிப்பதாகக் கூறும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி, முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய ஆறு கட்சிகளுமே இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. ஆனால், இந்த அவசரக் கூட்டு உருவான சூழ லையும், அதன் பின்னணியையும் உற்றுநோக்கினால், இது மக்களின் விடிவிற்காக உதித்த கூட்டணியா அல்லது அண்மைய அரசியல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட கட்சிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேடிக்கொண்ட தற்காலிகத் தப்பியோடல் வழியா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது.
இந்த ஊடக சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய எந்தவொரு தீர்க்கமான கேள்விக்கோ அல்லது சந்தேகங்களுக்கோ தலைவர்களால் முழுமையான பதில்களை வழங்க முடியவில்லை. ‘இதுவெறும் ஆரம்பக் கட்டம் தான், போகப் போகத் தான் எதையும் கூற முடியும்’ என்று மழுப்பலாகக் கூறிவிட்டு, அந்த சந்திப்பை அவசர அவசரமாக முடித்துக் கொள்வதிலேயே தலைவர்கள் குறி யாக இருந்தனர்.
தங்களின் எதிர்காலச் செயற்திட்டம் என்ன, எத்தகைய கொள்கைகளின் அடிப்படையில் நாம் ஒருங்கி ணைந்து நகரப் போகிறோம் என்பது பற்றிய எந்த வொரு தெளிவான வரைபடமும் இன்றி, வெறும் ஊடக வெளிச்சத்துக்காக மட்டுமே இவர்கள் கூடினார்களா என்ற கேள்விகள் தாராளமாக உள்ளன.
அதேநேரம், ஒருதரப்பினர் இதனை ஆளும்கட்சி யின் தூண்டுதலின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு ‘கைப்பாவை அணி’ என்று சாடும் வேளையில், மறுதரப்பினர் இதனைத் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகக் களம் இறக்கப்பட்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் மற்றுமொரு முகமூடி என்று விமர்சிக்கின்றனர்.
ஆனால், யதார்த்தமான உண்மை என்னவென்றால், அண்மைய தேர்தல் மாற்றங்களால் தங்களின் பாரம்பரிய வாக்கு வங்கிகளை இழந்து, அரசியல் அரங்கில் அநாதரவாக்கப்படும் தோல்விப் பயத்தில் ஒன்றி ணைந்துள்ள சிறுபான்மைக் கட்சிகளின் ‘கூட்டு அவலமே’ இதுவாகும்.
தத்தமது கொள்கைகளுக்குப் பாதகம் வராமல், தமிழ்ப் பேசும் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து செயற்படக் கூடிய சாத்தியமான விடயங்களில் மாத்திரம் இயங்குவது குறித்து இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், இந்த ஆறு கட்சிகள் மாத்திரம் தான் ஒட்டுமொத்த தமிழ்ப் பேசும் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்ல என்ற கசப்பான உண்மையை அவர்கள் மறந்துவிட்டனர்.
இங்கு பிரதானமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம், இந்த ஆறு கட்சிகளைத் தாண்டியும் தமிழ்ப் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய மாற்று அரசியல் சக்திகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகும். குறிப் பாக, கொள்கைப் பிடிப்புடன் இயங்குவதாகக் கூறும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்இந்த கூட்டில் இருந்து முற்றாக விடுபட்டிருக்கிறது.
‘பிற கட்சிகளும் வந்தால் வரவேற்போம்’ என்று ஊடக சந்திப்பின்போது எம்.ஏ. சுமந்திரன் சாதார ணமாகக் கூறிச்சென்றாலும், இந்த இணக்கப்பாட்டை உருவாக்கும் வகையில் அவரது கொழும்பு இல்லத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக்கட்டப் பேச்சுவார்த்தைகளின் போது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸையோ அல்லது ஏனைய தமிழ்ப் பேசும் சிறு கட்சிகளையோ பொருட்டாக மதித்து, அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்த முயற்சி கொள்கை ரீதியான இணக்கம் கொண்டது அல்ல என்பதை அவர்களே ஒத்துக்கொள்கிறார் கள். தமிழ் அரசுக் கட்சி தனது சமஷ்டி கோட்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை, ஏனைய கட்சிகளும் தங்களின் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்யவில்லை.
உண்மையில், இந்த புதிய கூட்டு என்பது கொள்கை சார்ந்ததல்ல. மாறாக இதுவொரு வரையறுக்கப்பட்ட, குறுகிய கால சுயநலச் செயற்றிட்டங்களைக் கொண்ட ஒரு தற்காலிகத் தளமாகவே தென்படுகிறது.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல், நியாயமான அதிகாரப்பகிர்வுடன் கூடிய புதிய அரசியலமைப்பு மாற்றம் மற்றும் காணிப் பிரச்சினைகள் போன்ற அதிகார மையங்களை நோக்கிய விடயங்களை மட்டுமே தங்களின் பிரதான கோரிக்கைகளாக இவர்கள் முன்வைத்துள்ளனர்.
ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறைமையை முழுமையாகவும் தீவிரமாகவும் எதிர்க்கின்ற, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அடிநாதமாகக் கொண்ட தீவிரத் தரப்புகள் இதில் இணையவில்லை.
மாறாக, சமஷ்டியை வெளியில் வலியுறுத்தினாலும், உள்ளுக்குள் ‘கிடைப்பதை பெற்றுக் கொள்ளலாம், அதிகார சுகத்தை அனுபவிக்கலாம்’ என்ற மிதவாத, சந்தர்ப்பவாத மனோநிலையில் இருக்கின்ற தரப்புக்களே இதில் தஞ்ச மடைந்துள்ளன என்ற நோக்கு நிலையை புறந்தள்ள முடியாதுள்ளது.
கடந்த காலங்களில் கொழும்பின் ஆட்சியாளர் களைத் தீர்மானிப்பதில் பின் கதவால் நுழைந்து அமைச்சுப் பதவிகளையும், சலுகைகளையும் அள்ளிப் பருகியவர்கள் தான் மக்களின் காவலர்களைப் போல வேடமிட்டு குறித்த மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், இந்த பொதுத் தளத்தின் ஊடாகத் தங்களின் நீண்டகால தேசியப் பிரச்சினைகளுக்கு எந்தவொரு நீதியான தீர்வும் கிடைக்கப் போவதில்லை என்பது வரலாற்று உண்மை.
ஏனெனில், இக்கூட்டில் இணைந்துள்ள முஸ்லிம் மற்றும் மலையகக் கட்சிகள் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாஷைகளையோ அல்லது தமிழ்த்தேசிய நிலைப்பாடுகளையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்பவை அல்ல.
இன்னும் சொல்லப்போனால், கடந்த முப்பதாண்டு காலப் போரில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைக் கூடப் பகிரங்கமாக ‘இனப்படுகொலை’ என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற, அதற்கு சர்வதேச நீதியைப் பெற்றுத்தர ஒன்றி ணைந்து போராடத் தயாரில்லாத கட்சிகள் தான் இந்த மேடையில் கைகோர்த்து நிற்கின்றன.
அந்தப் பேரவலங்கள் நடந்த காலகட்டத்தில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அங்கம் வகித்து, ஆளும் கட்சியின் போர்க் குற்றங்களுக்குத் துணையாக இருந்து, அவர்களின் அடக்குமுறைகளைப் போற்றித் துதித்துப் பதவிகளைக் காப்பாற்றிக் கொண்டவர்கள் என்பதை மறந்து விடமுடியாது.
அப்படியானால், கொள்கை முரண்பாடுகளும் கறைபடிந்த வரலாறும் கொண்ட இந்த ஆறு கட்சிகளும் ஏன் ஒன்றிணைய வேண்டும்? இதற்கான விடை மக்களின் துயரங்களில் இல்லை, மாறாக இவர்களின் சொந்த அரசியல் வீழ்ச்சியில் தான் உள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த ஆறு கட்சிகளுமே வரலாறு காணாத பேரிடியையும், தங்க ளின் அரசியல் அடித்தளத்தையே உலுக்கிய பெரும் பின்னடைவையும் நேருக்கு நேர் சந்தித்தன.
முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று, அந்த மக்களின் தனிப்பெரும் சக்தியாக விளங்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், அண்மைய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அலையிடம் தங்களின் கோட்டைகளை இழந்தன.
வடகிழக்கில் தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று தம்பட்டம் அடித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தங்களுக்குள் அடிபட்டு, மக்களின் கடுமையான நிராகரிப்புக்கு உள்ளாகி, வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பாராளுமன்ற ஆசனங்களை இழந்து சிதறின.
மலையகத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளைத் தங்களின் குடும்பச் சொத்தாக நினைத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் கூட, தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் அலையினால் தங்களின் பாரம்பரிய செல்வாக்கு அசைத்துப் பார்க்கப்பட்டு, முகவரி இழந்து நிற்கின்றன.
இவ்வாறு தங்களின் சொந்த மக்கள் கூட்டத்தி னாலேயே தூக்கியெறியப்பட்டு, கடுமையான அரசியல் சவால்களையும், இருப்புக்கான அச்சுறுத்தலையும் எதிர் கொண்டுள்ள இந்த ஆறு கட்சிகள் தான், இன்று தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ‘தமிழ்ப்பேசும் மக்கள்’ என்ற போர்வையில் ஒரு தற்காலிகக் கேடயத்தை உருவாக்க முயல்கின்றன. இது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தளம் அல்ல. மாறாக மூழ்கும் கப்பலில் இருக்கும் ஆறு மாலுமிகள் ஒண்டாகச் சேர்ந்து தங்களின் அரசியல் ஆயுளை நீடிப்பதற்காகப் போடும் பிழைப்புவாதக் கூட்டாகும்.
மக்களின் பிரச்சினைகளை முன்னிறுத்தி வீதியில் இறங்கிப் போராடுவதற்கோ அல்லது ஒரு வலுவான மாற்று அரசியல் கூட்டணியாக உருவெடுப்பதற்கோ இவர்களிடம் எந்தவொரு திராணியும் இல்லை, அதற்கான சாத்தியக்கூறுகளும் மிக மிக அரிதாகவே தென்படுகின்றன.
ஏனென்றால், இந்த ஆறு கட்சிகளினதும் அரசியல் நலன்களும், அவர்கள் இயங்கும் தளம் மற்றும் உள்வாங்கப்பட்டுள்ள சர்வதேச, பிராந்திய அரசியல் நிரல்களும் முற்றிலும் வௌ;வேறானவை. போருக்குப் பின்னரான கடந்த 17 ஆண்டு கால வரலாற்றில், ஒரே கொள்கையைக் கொண்ட தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளைக்கூட ஒரு பொதுத்தளத்தில் ஒன்றிணைத்து நிலையாகச் செயற்பட வைக்க முடியாமல் இராஜதந்திரத் தோல்வியே மிஞ்சியுள்ளது.
இத்தகையதொரு சூழலில், வடகிழக்கில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ‘சமஷ்டி’யைக் கோரும் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கையும்; வடகிழக்குக்கு வெளியே வாழும் தங்களின் மக்களின் பாதுகாப்பையும் பொரு ளாதார நலன்களையும் மட்டுமே பிரதானமாகக் கருதும் மலையகக் கட்சிகளின் கோரிக்கைகளும்; வடகிழக்கு இணைப்பைக் கடுமையாக எதிர்த்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனியலகைக் கோரும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் எவ்வாறு ஒரே புள்ளியில் இணைய முடியும்?
இந்தக் கொள்கை ரீதியான முரண்பாடுகள் எரியும் நெருப்பாக உள்ளுக்குள் இருக்கும் வரை, வெறும் ‘தமிழ்ப்பேசும் கட்சிகள்’ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு இவர்களை ஒரு நீண்டகாலக் கூட்டணியாகச் செயற்பட வைப்பது என்பது பகற்கனவாகும்.
இந்த ஆறு கட்சிகளின் அவசரக்கூட்டு என்பது, மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான விடிவெள்ளி அல்ல. மாறாக தங்களின் வீழ்ச்சியுற்ற அரசியல் சாம்ராஜ்யங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, மக்களின் உணர்வுகளை மீண்டும் ஒருமுறை மூலதனமாக்கத்துணியும் சிறுபான் மைத் தலைமைகளின் சுயநல நாடகமே தவிர வேறொன்று மில்லை.
ஏனென்றால் 2016ஆம் ஆண்டு முன்னாள் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனா, ரணில் விக்கிரமசிங்க ஆகி யோரின் கூட்டு ஆட்சியில் புதிய அரசியலமைப்புச் செயற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, தமிழ்முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மற்றும் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்து வழிநடத்தல் குழுவுக்கு அரசியல் தீர்வுக்கான முன்மொழிவைச் செய்திருந்தன என்பதையும் இங்கே மீள நினைவு படுத்துவது குறித்த தரப்பினரின் தமிழ் பேசும் மக்களின் மீதான அந்தக் கட்சிகளின் ஆழ்ந்த அக்கறையை யும், இணைந்தை செயற்பாட்டையும் அப்பட்டமாக வெளிப் படுத்துகின்றதல்லவா?




