மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைகையைப் பற்றிய புரிதலோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் – காளிதாசன்

327 Views

இயற்கை எனது நண்பன்பற்றிய புரிதலோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள்2 மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைகையைப் பற்றிய புரிதலோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் - காளிதாசன்சூழலியலாளரும், மொழிப் பற்றாளருமான காளிதாசன் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலியின் தாயகக்கள நிகழ்ச்சிக்கு வழங்கிய செவ்வியின் சில பகுதிகள்

கேள்வி?
தமிழ்த் தேசிய இனத்திற்கு, தமிழர்களாகிய எங்களுக்கு எங்களுடைய விடுதலையிலே இயற்கை வளங்களின் விடுதலை எவ்வளவு முக்கியம் என்பது பற்றிய உங்களின் பார்வை என்ன?

பதில்!
இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பது, ஒரு தனியான செயற்பாடாக நான் நினைக்கவில்லை. ஒரு இனத்தின் எல்லாக் கோரிக்கைகளோடு, அது சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்பதைப்போல இயற்கை வளங்களைப் பாதுகாப்பது என்பதும் மிகமிக அவசியமாகின்றது. அங்கிருந்து தான் நாம் தொடங்குகிறோம். இயற்கை எனது நண்பன் என்று தேசியத் தலைவர் சொன்னது, வெறும் வார்த்தையல்ல, அதற்கூடாக மிகப் பெரியதொரு புரிதல் இருக்கின்றது. தன் மண்ணைப் பற்றிய புரிதல். அப்படித்தான் நான் நினைக்கின்றேன். உலகெங்கும் நமது இனத்தின் மேன்மைக்கான பல்வேறு இலக்குகளை நோக்கி நாம் பயணிக்கின்றோம். அந்த இலக்குகள் அரசியல், பொருளாதார, சமூக மாற்றத்திற்கான விடுதலைக்கான ஒரு நோக்காக இருக்கின்ற போது, நாம் வாழ விரும்புகின்ற இயற்கை வளங்களை பாதுகாத்து வைப்பதன் மூலமாகத்தான் நம் பிள்ளைகள் ஒரு நலமான வாழ்வை வாழமுடியும்.

எல்லாவற்றைப் பார்க்கிலும் இயற்கை தான் நமக்குப் பாதுகாப்பானது.  அதை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைத் தான் நாம் உணர்ந்தோம். தமிழகத்தில் நமக்கு ஒரு புரிதல் எப்போது வந்ததென்றால், நமக்கொரு மரபு இருக்கின்றது. இயற்கை சார்ந்த மரபு அது. உலகத்தில் இன்று சூழலியல் வார்த்தைகள் Ecology, environment போன்ற வார்த்தைகள் இன்று நவீன அறிவியலில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தாமலே இயற்கைப் பாதுகாப்பை மிக அழுத்தமாக உணர்த்திய, உணர்ந்திருந்த சமூகம் தமிழ்ச் சமூகம். நீரின்றி அமையாது உலகு என்று சொன்ன அந்த வார்த்தையிலிருந்து அல்லது பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல் என்று சொல்கின்ற பல்லுயிர் ஓம்பல் என்ற அந்தப் புரிதலில் ஆரம்பித்து,  சிலப்பதிகாரத்தில் இறைவாழ்த்து வைக்க வேண்டிய இடத்தில், மாமழை போற்றுதும் என்று இறைவனுக்கு நிகராக இயற்கையை வைத்திருந்த அந்தப் பார்வை இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்கைகையைப் பற்றிய மிகப்பெரிய புரிதலோடு அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

கேள்வி?
நவீன உலகத்தில் இயற்கையோடு வாழும் தமிழினம் எவ்வாறு அதை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளலாம்?

பதில்!
இயற்கை பற்றிய அக்கறை தற்போது மிக அதிகமாகத் தேவைப்படுகிறது என்பது தான் எதார்த்தம்.  இந்த கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அறிவியலின் உச்சத்தில் நாம் இருக்கிறோம் என்று மமதையோடு மனிதகுலம் இருந்த போது, ஒரு சிறு நுண்ணுயிரி நீ அவ்வளவு பெரியவனா என்று நம்மைக் கேட்டு, முடக்கி வைத்திருக்கிறது இது தான் உண்மை. இயற்கை என்பதை உணர்வாக சொல்வதானால், இயற்கை என்பது அம்மா. அந்த அம்மா நல்லா இருக்கிறவரைக்கும் தான் பிள்ளைகள் நல்லாக இருப்பார்கள்.

உலகத்தில் ஒட்டுமொத்த மனித குலமே ஓடுவது, உழைப்பது, சம்பாதிப்பது எல்லாவற்றிற்கும் அர்த்தம் என்னவென்றால், நமது பிள்கைள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.அந்தப் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தால் அந்தப் பிள்ளைகளுக்காக ஒரு இயற்கை உலகை கொடுக்க வேண்டும். ஏனெனில், இது கணினி யுகமாக இருக்கலாம். நவீன அறிவியலின் உச்சத்தில் நாம் இருக்கலாம். தகவல் தொழில் நுட்பத்தில் வல்லவர்களாக இருக்கலாம். மனிதகுல வரலாற்றில் இப்போது இருக்கிற பிள்ளைகள் தான் நவீன அறிவியலின் உச்சத்தில் இருக்கிறார்கள். உண்மை தான்.

ஆனால் நம் கையில் இருக்கிற இந்த செல்பேசி ஆகட்டும், கணினி ஆகட்டும், அவை உலகத்தின் அனைத்து செய்திகளையும் நமக்குக் கற்றுத்தரும். அந்தக் கணனியிடம் சரியாகக் கேள்வி கேட்டால் அது ஒரு பதில் தரும். எல்லாவற்றையும் கற்றுத் தரும். ஆனால் பசி எடுத்தால் சோறும், தாகம் எடுத்தால் தண்ணீரும் இந்த மண் தான் கொடுக்க வேண்டும். இந்த மண்ணின் இயற்கையை இழந்து விட்டு, அறிவியலின் உச்சத்தில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருந்தால், உங்கள் பிள்ளைகள் பரிதாபத்திற்குரியவர்களாக மாறிப் போவார்கள். இது தான் அறிவியலை சரியாக பார்த்த வரையில் சொல்லுவது. இதை ஒரு நிறைத்த வாழ்வியலுக்கான செய்தியாகத் தான் நாம் உணர வேண்டும். இந்த உலகம் முழுவதும் இதுதான்.

இதைவிட மிக முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நமது வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள நாம் இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். இது உலகம் முழுவதற்கும் பொதுவானது. நம்மைப் பொறுத்தளவில், தமிழர்களைப் பொறுத்தளவில் நமக்கு தமிழ்நாடு, தமிழீழம் இதில் நமது மரபே இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த மரபுதான். ஒரு நிலத்திற்கு இலக்கணம் படைத்தார்களானால், நாம் தான் படைத்தோம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. அதுவே வியப்பிற்குரிய செய்தி அது.

சூழலியல் அறிவியல் இயற்கை வளங்கள் பற்றி பல செய்திகளைச் சொல்கிறது. இயற்கை வளங்களைப் பாதுகாத்தால் தான் ஒரு நாடு நன்றாக இருக்கும் என்று சொல்கிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக திருவள்ளுவர் ஒரு குறள் சொல்கிறார். அரண் என்னும் அதிகாரத்தில் வருகின்றது. அந்தக் குறளில் மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். இதன் பொருள் தூய்மையான தண்ணீரும், மண்ணும், அடர்ந்த காடும் இருந்தால், ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும் என்பதே பொருள்.

இந்தப் புரிதலை நம் பிள்ளைகளுக்கு நாங்கள் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்தச் செயற்பாடுகள் முன்னெப்போதையும்விட தற்போது வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. புதிய தலைமுறை இளைஞர்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை கையில் எடுத்து, இயங்க ஆரம்பித்துள்ளார்கள். அதேபோல் உலகெங்கும் இருக்கும் தமிழீழ சொந்தங்கள் நம்முடைய பிள்ளைகளின் வாழ்வைக் காப்பாற்றுவதற்கு, எப்படி நமது மொழியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறதோ, அப்படி நாம் வாழ்ந்த, வாழப்போகிற தமிழீழ மண்ணின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான பங்களிப்பை நாம் கொடுக்க வேண்டும்.

அங்கு நடைபெறுகின்ற அரசியலை நாம் எப்படிக் கவனிக்கின்றோமோ, அதேபோலவே அந்த மண்ணில் ஏற்படுகின்ற மாற்றங்களைக் கவனித்து, அவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற அக்கறையோடு நாம் அத்தனை பேரும் இணைய வேண்டும். இதற்கான ஒரு திட்டமிடல் நமக்குத் தேவைப்படுகிறது. அப்படி காப்பாற்றி வைத்தால் தான், நம் பிள்ளைகளுக்கு நமது தாயத்தை என்றோ ஒரு நாள் அவர்கள் போகும் போது அது வளமான மண்ணாக இருக்க முடியும். இருக்க வேண்டும். அந்த உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது.

இயற்கைதமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தமிழ் மண்ணில் அக்கறையுடைய எல்லோருமே இந்த மண்ணின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான குரலை எழுப்ப வேண்டும். அந்தக் குரல் முன்னரை விட இப்போது பலமாகக் கேட்க ஆரம்பித்துள்ளது என்பது, எங்களைப் போன்றவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி. கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருகின்றோம். இப்போது தான் புதிய நம்பிக்கைகள் பிறக்கிறது. அதில் குறிப்பாக இயற்கை வேளாண்மை. இது உடல் நலத்தையும், மண் நலத்தையும் பாதுகாப்பது. இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு தொடக்கமாக இது அமைகின்றது. இந்த இயற்கையோடு இணைந்த வாழ்வியலை நம் பிள்ளைகளுக்கு புரிய வைத்து விட்டோமானால், அவர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் அதை தக்க வைத்துக் கொள்வார்கள். அது எம் மண்ணின் மீதான அக்கறையை இன்னும் விரிவுபடுத்தும் என்று தான் நினைக்கிறேன்.

ஆகவே உலகெங்கும் இருக்கக்கூடிய தமிழ் இளைய சமூகத்திற்கு என்னுடைய கோரிக்கை, நம்முடைய மரபான இயற்கை உணர்வை, அது இயற்கை உணவாகட்டும், இயற்கை வாழ்வாகட்டும் அதை நாம் தேடுவோம். அந்தத் தேடுதல் என்பது, நம்மையும், இனிவரும் சமூகத்தையும் காப்பாற்றி வைக்கும் என்று நம்புவோம். அதற்காக நாம் ஒன்றிணைந்து நிற்போம். நம்முடைய மொழிக்காக நாம் நிற்க வேண்டும். நம்முடைய மண்ணிற்காக நாம் நிற்க வேண்டும். நம்முடைய இயற்கைக்காகவும் நாம் கைகோர்த்து நிற்க வேண்டும். மிக முக்கியமான தருணத்தில் இருக்கின்றோம். இணைந்து நிற்போம். இதுதான் எனது கோரிக்கையாக இருக்கும்.

கேள்வி?
இறுதியாக எங்கள் நேயர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புகின்ற செய்தி என்ன?

பதில்!
நமக்கு ஒரு தனித்துவமான வரலாறு உண்டு. ஒரு தொன்மை வரலாறு உண்டு. அந்த தொன்மை வரலாறு முழுக்க நாம் அறம் போற்றுகிற சமூகமாக இருந்திருக்கிறோம். உலகத்தை நேசிக்கிற சமூகமாக இருந்திருக்கிறோம். யாதும் ஊரே என்கிற உணர்வு நம்மிடம் இருந்திருக்கின்றது. அந்த உணர்வு தான் இயற்கையை நேசிக்கின்ற பெரும் உணர்வு. இந்த உலகம் நம்மை நேசித்ததா என்ற கேள்வியை உருவாக்க வேண்டும். நாங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது.

இன்று தாயகத்தை இழந்து விட்டோம் என்று உலகெங்கும் இருக்கின்ற தமிழ் உள்ளங்கள், அந்த நம்பிக்கையை ஒருபோதும் இழக்க வேண்டாம். வரலாறு நமக்குத் தெரியும். வரலாறு நிச்சயமாக நமக்கான ஒரு பெரும் எதிர்காலம் காத்திருக்கின்றது என்ற நம்பிக்கையோடு இயங்குவோம். இந்த நம்பிக்கை நமக்கும், நமது பிள்ளைகளுக்குமான ஒரு வளமான வாழ்வை நோக்கி, மாறும். மாறாது என்ற வார்த்தையைத் தவிர எல்லாமே மாறும் என்ற ஒப்பற்ற தத்துவம் நம்முன்னால் ஓடிக்கொண்டே இருக்கட்டும். நாம் தொடர்ச்சியாக இயங்குவதன் மூலமாகவே இது சாத்தியமாகும். ஒருங்கிணைந்து, ஒத்த உணர்வோடு இயங்க வேண்டும்.

உலகம் முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களை இணைத்தோமானால், இந்த உலகத்தில் எல்லாத் தளங்களிலும் இயங்கக்கூடிய பலமானவர்களாக நாங்கள் இருப்போம். அந்த பலம் சிறந்த அரசியலுக்கும், வாழ்விற்கும் கூட்டிப் போகும். இது எம் எல்லோருக்கும் பொதுவானது. அந்தத் தேடுதலில் கூடவே இந்த இயற்கை பற்றிய புரிதலோடு, இயற்கையோடு நோக்கிய வாழ்க்கையை திருப்பிக் கொள்கிற அவசியம் நம் காலத்தின் தேவையாக இருக்கிறது. உணவையே மருந்தாக சாப்பிட்ட மரபு நம்முடையது. இளைய தலைமுறை நம்பிக்கையோடு இருப்போம். நாம் நிச்சயமாக வெல்வோம். நாம் நினைக்கிற எல்லையை அடைவோம் என்ற நம்பிக்கையோடு இருப்போம். அதுதான் இந்த இளைய சமூகத்திற்கு என்னுடைய கோரிக்கையாக நான் வைக்கிறேன்.

Leave a Reply