இலங்கையின் கொரோனா வைரஸ் தாக்கம் – பாதிப்பும் அதன் விளைவுகளும் – பிரியமதா பயஸ்

525 Views

கொரோனா இலங்கையில் எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது

இயற்கை நமக்கு அளித்த கொடை அனைத்து வளங்களும் நிறைந்த இந்த உலகும், உணவும் மட்டுமே. அதை மீறி வந்தவை எல்லாம் மனி-தன் என்ற நம்மால் கண்டுபிடிக்கப்பட்டவையே. உணவில் கூட நாம் ஏராளம் வகைகளை இப்போது கண்டு பிடித்து இருக்கிறோம். ஆனால் இயற்கை தன்னிலை மாறாமல் இருப்பதற்கு நாம் எந்த வழிவகைகளையும் செய்யவில்லை.  அதை அழித்து, அதன் வேரில் குடிகொள்ள நினைத்து, மனிதன் இழந்தவை ஏராளம். ஒரு காலத்தில் 100இற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆயுள் கொண்டு வாழ்ந்த மனிதன், இப்போது நினைக்க முடிக்க இறந்து போகிறான், இதற்கு எண்ணற்ற காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும், கொடிய நோய்கள் என்ற ஒரு காரணத்தை மட்டும் நாம்  தற்போது நேரடியாக உணர்கின்றோம்.

கொரோனா இலங்கையில் எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது

உலகில் அதிக சனைத்தொகை கொண்ட சீனாவில் உருவாகிய கொரோனா என்ற வைரஸ்,  உலக சனத்தொகையில் கணிசமான அளவைக் குறைத்துக் கொண்டு,  தன் பாதையில் போய்க்கொண்டே இருக்கின்றது .

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 45.88 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் 221,949,190 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 198,538,449 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 105,189 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என உலக சுகாதார நிறுவன புள்ளிவிபரங்கள் கூறுகின்றன .

இந்த கொடிய நோய் கொரோனா இலங்கையில் எவ்வளவு தாக்கம் செலுத்துகிறது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

இலங்கையைப் பொறுத்தவரை, கொரோனாவில் இருந்து மிகவும் பாதுகாப்பாக மக்கள் தப்பித்துக் கொள்ளக்கூடிய அத்தனை வழிவகைகளையும் கொண்ட ஒருநாடு, ஆனாலும் சில அலட்சிய, அசமந்தப் போக்குகளால் உலகளவில் கொரோனா பரவும் நாடுகளில் முன்னணியில் நிற்கும் நாடுகளுள் இலங்கையும் இடம்பிடித்துள்ளமை துரதிஷ்டவசமானது .

‘ஒபரேஷன் ஃப்ரீடம்’ என்ற பெயரில் இலங்கையில் கொரோனாவை அளிக்கும் செயலணி செயற்பட்டுக்கொண்டு இருக்கிறது. இலங்கை முழுவதும் இதன் தாக்கம் தங்குதடையின்றி விரவிக்கொண்டே போகின்றது. வடக்கு கிழக்கை பொறுத்தவரை, கொரோனா தன்  இஸ்டத்துக்குத் தாண்டவமாடுகிறது என்றே சொல்லலாம் .

ஒபரேஷன் ஃப்ரீடம்

இந்த ‘ஒபரேஷன் ஃப்ரீடம்’ நடவடிக்கை மூலம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கொரோனா அழிப்புக்கான  முக்கிய பணிகளை முடுக்கி விட்டிருக்கின்றார், ஆனாலும் கொரோனா வைரஸ் மக்களின் அன்றாட செயற்பாடுகளுடன் தானும் முண்டியடித்துப் பரவுவதை தடுக்கவோ தவிர்க்கவோ முடியவில்லை .

இலங்கையின் நாடாளுமன்றத்தேர்தல், நாட்டில் கொரோனா பரவலை அதிகரிக்க செய்த முக்கிய சம்பவம் என்றே சொல்லலாம், குறிப்பாக வடக்கு கிழக்கு பகுதிகளில் கொரோனா  பரவ முதல் காரணி தேர்தல் என்றே இன்றுவரை கூறப்படுகிறது. கொரோனா வைரஸ்  பெருந்தொற்றுக் காரணமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு தடவைகள் பிற்போடப்பட்டு, இறுதியில் 2020 ஓகஸ்ட்  5 ஆம் திகதி  நடத்தப்பட்டது, தேர்தலில் 75% மக்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர். இது 2015 ஆம் ஆண்டு தேர்தலை விட சிறிது குறைவான பங்களிப்பு வீதமாக கருதப்பட்டது.

ஒபரேஷன் ஃப்ரீடம்இந்த ஐந்தாம் திகதிக்கு பின்னர் இலங்கையில் கொரோனா சடுதியாக தன்  வேலையை காட்ட தொடங்கியது. பிரதான சந்தைகள், கடைத்தொகுதிகள், மீன் சந்தைகள், ஆடை தொழிற்சாலைகள் என கொரோனா கொத்தணிகள் உருவாகத்  தொடக்கி, இன்று வீட்டுக்கு ஒருவர் கொரோனா நோயாளிகள் என்ற நிலைமையில் வடக்கு கிழக்கு நிலைமை உள்ளது. தெற்கைப்  பொறுத்தவரை, வடக்கு கிழக்கைவிட அதிகளவு தொற்று இடம்பெறும் இடமாகவே காணப்படுகிறன்றமை குறிப்பிடத்தக்க விடயம் .

இலங்கையில் கொரோனா  முதலாவது அலையில் 13 பேர் உயிரிழந்திருந்ததுடன், இரண்டாவது அலையில் 596 பேர் உயிரிழந்திருந்தனர்.

இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரிக்க இலங்கை அரசு பயணத்தடையினை அமுல்படுத்தியது. இது சற்று தளர்வுடன் கூடிய நாடு முடக்கத்தை பிரதிபலித்தது. இதனால் தொற்றை அதிகரிக்க முடிந்ததே அன்றி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியவில்லை என்றே கூறவேண்டும். இந்த கட்டுக்குள் அடங்காத நிலைமை மூன்றாம் அலையைத் தோற்றுவித்துள்ளது. மூன்றாவது அலையில் செப்ரெம்பர் 8 ஆம் திகதி வரை 10504 பேர்  உயிரிழந்துள்ளனர் .

செப்ரெம்பர் 8 ஆம் திகதிவரை நாட்டில் மொத்தமாக 471863 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளனர், 73081 பேர் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். 8 ஆம் திகதி மட்டும் மொத்தம் 2964 பேர் புதிதாக கண்டறியப்பட்ட கொரோனா தொற்றிய நோயாளிகளாக உள்ளனர், 388278 பேர் குணமடைந்து குடும்பங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர் .

வடக்கில் செப்ரெம்பர் 8 ஆம் திகதி வரை 327 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கின்றனர்.  வடக்கு மாகாணத்தில்  ஒகஸ்ட் 26 வரை 23 ஆயிரத்து 36 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில். அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிளவானோர் உயிரிழந்துள்ளனர்.  செப்ரெம்பர் 7 ஆம் திகதி வரை 224 பேர் யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் 2020 ஜனவரியில் ஆரம்பித்த போதும், வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதத்தில்தான் முதலாவது கொரோனா தொற்றாளர் இனம் காணப்பட்டார்.

அன்றிலிருந்து செப்ரெம்பர் 7 ஆம் திகதி வரையான 17 மாதங்களில் வடக்கு மாகாணத்தில் 23 ஆயிரத்து 36 பேர் கொரோனா  தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 327 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 224 பேரும் வவுனியா மாவட்டத்தில் 55 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பேரும் முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் தலா 15 பேரும் கொரோனா வைரஸ்  நோயினால் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கின்  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒவ்வொரு 24 மணித்தியாளத்தில் 206 பேர் கொரோனா  நோய் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். ஓகஸ்ட் மாதத்தில் 7919 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். கடந்த வாரத்தில் 1414 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த காலங்களில் பதிவான கொரோனா  உயிரிழப்புக்களில் பெரும்பாலானர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும், தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத மற்றும் தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நாட்டின் முழுமையான தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை அண்மித்துள்ளது. இதன்படி, நாட்டில் இதுவரை 97 இலட்சத்து 14 ஆயிரத்து 857 பேர் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சைனோபாம், அஸ்ட்ராசெனகா, பைசர், ஸ்புட்னிக் வி, மொடர்னா, ஆகிய தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு தடுப்பூசி இரண்டு தடவைகள் செலுத்தப்பட்டுள்ளன.

கோவிட்-19 ஏற்பட்டதன் காரணமாகக் கிடைக்கும் பாதுகாப்பு ஆளுக்கு ஆள் மாறுபடும். இது ஒரு புதிய வைரஸ் என்பதால், இயற்கையான நோயெதிர்ப்புத் திறன் எதுவும் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்பது  தெரியாத விடயம். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்திய பிறகு அவற்றை எடுத்துவிட்டு வழக்கமான வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவது ‘கோவிட்-19’-இன் பரவலை நிறுத்தாது என வைத்தியத்துறை கூறுகின்றது .

ஆனாலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, நாட்டை முழுமையாக மூடி வைத்திருக்க இடமளிக்கவில்லை. ஆகையால் குறிப்பிட்ட தளர்வுகளுடன் முடக்க நடை முறை வரும் 13 ஆம் திகதிவரை இலங்கையில் நடைமுறையில் உள்ளது .

ஒட்டுமொத்தமாக இலங்கையில் கொரோனா நிலைமை மிக மோசமான பாதிப்புக்களை கொடுத்துக் கொண்டு உள்ளமை நாட்டில் பலவகையான நெருக்கடியை உண்டுபண்ணியுள்ளது.

1 COMMENT

Leave a Reply