’13’ குறித்த மோடியின் அதிரடி தமிழருக்குத் தீர்வைத் தருமா?

“அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவிடம் வலியுறுத்தியது தமிழத் தரப்பினருக்கு திடீர் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. தமக்காகக் குரல் கொடுக்க இந்தியா களமிறங்கியிருப்பதாக அவர்கள் நம்புகின்றார்கள். தமிழ்க் கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் அதனை வரவேற்று அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார்கள். ஆனால், உண்மையில் மோடியின் இந்த நகர்வு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டுவந்து விடுமா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் இடையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற ‘மெய்நிகர்’ சந்திப்பின் போதுதான் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என மோடி வலியுறுத்தியிருந்தார். அதனையடுத்தே 13ஆவது திருத்தம் குறித்து அனைவரது கவனமும் திரும்பியிருக்கின்றது.

“இந்தியா எம் மீது அழுத்தம் கொடுக்க முடியாது” என முன்னாள் கடற்படை அதிகாரியும், மாகாண சபைகள் அமைச்சருமான சரத் வீரசேகர கர்ஜித்திருக்கின்றார். “அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பன்மை இருப்பதால், மோடியின் கருத்துக்கு செவிமடுக்கத் தேவையில்லை” என பௌத்த பிக்கு ஒருவர் முழங்கியிருக்கின்றார். போராசிரியரான மெதகொட அபயதிஸ்ஸ தேரரே அவ்வாறு கூறியிருக்கின்றார்.

“13ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்து ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்தில் வலுவடைந்திருக்கும் பின்னணியில், இந்தியப் பிரதமர் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருப்பதன் பின்னணியில் நிச்சயமாக ஒரு அரசியல் நகர்வு இருந்திருக்க வேண்டும். அண்மைக்காலத்தில் ’13’ குறித்தோ, இனநெருக்கடிக்கான தீர்வு குறித்தோ பேசாதிருந்த இந்தியா இப்போது, அதிரடியாக இவ்வாறு கூறியிருப்பது இலங்கை அரசுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என்பது உண்மைதான்.

1987 இல் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் குழந்தைதான் 13 ஆவது திருத்தம். இலங்கை மீது அழுத்தத்தைக் கொடுப்பதற்கு இந்தியாவிடம் இன்றுள்ள ஒரேயொரு துருப்புச் சீட்டும் அதுதான். அந்தத் துருப்புச் சீட்டு தம்மிடம் இருக்கின்றது என்பதை மஹிந்தவுக்கு, மோடி நினைவுபடுத்தியமைக்குக் காரணம் இருக்கின்றது.

சீனாவுடன் நெருங்கிச் செல்லும் இலங்கையை வழிக்குக் கொண்டுவருவதற்கு இதனை இந்தியா இப்போது பயன்படுத்தியிருப்பதாகவே இராஜதந்திர வட்டாரங்கள் கருதுகின்றன. அதேவேளையில், “13 ஐ இல்லாதொழிக்க வேண்டும்” என ஆளும் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியாகச் சொல்லிவருவதும் இந்தியப் பிரதமரின் இந்த அதிரடி நகர்வுக்கு ஒரு காரணம்.

மோடியின் இந்த அதிரடிக் கருத்து ராஜபக்‌ஷக்களுக்கு கடும் சீற்றத்தையும், எரிச்சலையும் கொடுத்திருக்கின்றது. மோடி இதனை வலியுறுத்திய போது, மஹிந்த ராஜபக்‌ஷ அதற்கு பிரதிபலிப்பு எதனையும் வெளியிடவில்லை. மௌனமாகவே இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரு நாட்டு கூட்டறிக்கையில் மோடி சொன்னது என்ன என்பது தெளிவாக வலியுறுத்திக் கூறப்பட, இலங்கை அரசின் சார்பில் தனியாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அது மறைக்கப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் அந்த செய்தி வெளிவருவதை அரசாங்கம் விரும்பவில்லை என்பதையே இது பிரதிபலிக்கின்றது.

20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பைத் தயாரிப்பதற்கான பணிகள் ஆரம்பமாகும் என்பதுதான் அரசாங்கத்தின் நிலைப்பாடு. தற்போதைய 13 இல் உள்ள அம்சங்கள் புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்படுமா என்பது முக்கியமான ஒரு கேள்வியாக இருக்கும் பின்னணியில்தான் ’13’ இல் உள்ள அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மோடி கூறியிருக்கின்றார்.

ராஜபக்‌ஷக்களின் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் மாகாண சபைகள் குறித்து இரண்டு விதமான நிலைப்பாடுகள் உள்ளன. ஒரு தரப்பினர் அது இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக் கருதுகின்றார்கள். குறிப்பாக கோட்டாபய ராஜபக்‌ஷ தரப்பு மாகாண சபைகள் தேவையில்லை என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றது. மஹிந்த தரப்பு மாகாண சபைகள் இருக்கட்டும் ஆனால், அதிகாரங்களைப் பிடுங்கி விடுவோம் என நினைக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில்தான் மோடி இப்போது களமிறங்கியிருக்கின்றார். மோடியைப் பொறுத்தவரையில் இலங்கை மீது தமது பிடியை வைத்திருப்பதற்கு அவர்களுக்குள்ளது 13 மட்டும்தான். அதனால், அதனைப் பாதுகாக்க அவர்கள் விரும்புவார்கள். மோடியின் இந்த நகர்வு தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனைக் கொண்டுவருமா எனப் பார்த்தால் நிச்சயமாக இல்லை. தமது நலன்களுக்காக இந்தியா மேற்கொள்ளும் மற்றொரு காய்நகர்த்தல்தான் இது.

1980 களில் அமெரிக்காவின் பிடியிலிருந்து இலங்கையை மீட்க தமிழ்ப் போராளிகளை ராஜீவ் காந்தி பயன்படுத்தினார். இப்போது அதேபோல சீனாவின் ஆதிக்கத்திலிருந்து இலங்கையை விடுவிக்க 13 ஐ மோடி பயன்படுத்துகின்றார். அதாவது மீண்டும் பகடைக்காய்களாக தமிழர்கள் பயன்படுத்தப்படுகின்றார்கள். இதனைவிட, சமஷ்டி என 13 க்கு மேலாக எதிர்பார்த்த தமிழர்கள், 13ஐ பாதுகாத்தால் போதும் என்ற நிலைக்கு இப்போது வந்துவிட்டார்கள்.

மோடியின் இந்த நகர்வை எமக்குச் சார்பாகப் பயன்படுத்த தமிழ்த் தலைவர்களிடம் தந்திரோபாயங்கள் ஏதாவது உள்ளதா?

 அகிலன் –