மட்டக்களப்பில் மண் அகழும் பிரச்சினையால் பாதிப்படையும் விவசாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அகழும் பிரச்சினை காரணமாக மாவட்டம் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுவருவதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நேற்றைய தினம் சுற்றுச் சூழல் அமைச்சர் மகிந்த அமரவீர அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் தந்தபோது அவரை சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அதன்போது மட்டக்களப்பு மாவட்ட சுற்றுச் சூழல் சம்பந்தமாக அவருடன் கலந்துரையாடியிருந்தோம். சிவில் சமூகம் சார்பாக ஒரு மனுவும் அவரிடம் கையளிக்கப்பட்டது.

மண் அகழ்வினால் எமது மாவட்டத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. சட்டவிரோத மண் அகழ்வு என்ற வார்த்தையை நாங்கள் உபயோகித்தாலும் சட்டத்திற்கு உட்பட்ட வகையில் அரச அதிகாரிகள் அனுமதிப் பத்திரங்களை வழங்கினாலும் மண் அகழ்பவர்கள் சட்டத்திற்கு புறம்பாக அவர்களுக்கென்று ஒதுக்கப்படாத இடத்திலும் ஆறுகள், அருவிகள், வாய்க்கால்கள் என நீர் ஊற்றெடுத்து ஓடுகின்ற இடத்திற்கு அருகில் அதிகளவான மண் அகழ்வதால் விவசாய நிலங்கள் அழிந்துபோயுள்ளன. மண்ணின் வளமானது பாதிக்கப்படுவதால் தொடர்ச்சியாக விவசாயம் பாதிப்படையக்கூடிய சூழல் காணப்படுகின்றது.

IMG 0083 மட்டக்களப்பில் மண் அகழும் பிரச்சினையால் பாதிப்படையும் விவசாயம்

வாகனேரி போன்ற இடங்களில் மக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்புகளை வெளிப்படுத்தி போராட்டங்களை நடத்தியதுடன் இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கும் தமது ஆட்சேபனைகளை தெரிவித்திருக்கின்றார்கள். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களெல்லாம் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதுவரை அந்தப் பிரச்சினைக்கு எதுவித தீர்வும் எட்டப்படாத நிலையில் தொடர்ச்சியாக மண் அகழ்வு நடைபெற்றுவருவது எமது மாவட்டத்திற்கு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.

மண் சூறையாடப்படுவதால் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத சூழல் மட்டுமல்ல நிலத்தடி நீரும் வற்றக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

சித்தான்டி பிரதேசமானது ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்படுகின்ற ஒரு பகுதியாகும். இந்த மாதிரியான பிரதேசங்கள் எதிர்காலத்தில் இன்னும மோசமான பாதிப்புகளை சந்திக்கும் என்பதை எங்களால் உணர முடிகின்றது.

மண் அகழும் இடங்களிற்கு அருகிலுள்ள போக்குவரத்துக்கான பாதைகள் இடிந்துபோயுள்ளன. ஒருபக்கம் சாய்ந்த நிலையில் பாலங்கள் காணப்படுகின்றன. ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் இவ்வாறான நிலைமைகள் காணப்படுகின்றன.

இது சம்பந்தமாக நாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பலதடவைகள் பேசினாலும் காவல் துறையினர் தான் இதனை கண்காணிக்க வேண்டும், அவர்கள்தான் இதற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கருத்துக்களை பல தடவைகள் கூறியிருக்கின்றனர்.

காவல் துறையினரிடம் இதுபற்றி தெரிவித்தபோது அவர்கள் இதுதொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதாக கூறுகின்றார்களே தவிர சட்டவிரோதமாக மண் அள்ளிக்கொண்டு செல்கின்ற வீதிகள் எல்லாம் மிகமோசமாக பாதிப்படைந்து காணப்படுகின்றன. இது ஒழுங்குபடுத்தல் இல்லாத ஒரு நிகழ்ச்சி நிரலாக இந்த மாவட்டத்தில் இருந்துகொண்டிருப்பது மிகவும் கவலையான விடயமாகும்.

அமைச்சர் அவர்களை சந்தித்தபோது இந்த மாதிரியான முறைகேடான விடயங்கள் இந்த மாவட்டத்தில் இனிமேல் நடைபெறாது என்பதுடன் மாவட்டத்தில் இது தொடர்பில் கலந்தாலோசனை செய்வதற்காக குழுவொன்றை அமைத்து அதனூடாக அனுமதிப் பத்திரங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்பதுடன் அந்த நேரத்தில் சிவில் சமூகங்களும் உள்வாங்கப்படுவார்கள் என்ற நல்ல கருத்தையும் அவர் தெரிவித்திருந்தார்.

நாங்கள் இது தொடர்பாக மாவட்ட செயலாளர் அவர்களையும் அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடலை ஏற்படுத்தி சிவில் சமூகமும் அரசாங்க அதிகாரிகளும் இணைந்து சுற்றுச்சூழலுக்கு எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாத வகையில் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றலாம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கின்றோம்.” என்றார்.