2026 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அழைப்பு விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் வெள்ளிக்கிழமை (24) மாலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அழைப்பை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பின் சார்பில், 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் 2026 மே 18ஆம் நாள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் மீண்டும் ஒன்று கூட இருக்கின்றோம்.
இந்த நிகழ்வில் கட்சி, மதம், பிரதேசம் போன்ற குறுகிய மனப்பான்மைகளை கடந்து, ஈழத்து மக்களாக ஒன்றிணைந்து அன்றைய துயர நாளை நினைவுகூர வேண்டும் என வலியுறுத்தினார்.



