வியட்நாமைத் தாக்கிய சூறாவளி- பல இலட்சம் மக்கள் பாதிப்பு

வியட்நாமைத் தாக்கிய சூறாவளியின் காரணமாக பல இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இச் சூறாவளியின் காரணமாக 174 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை காலை, உள்ளுர் நேரம் 11.00 மணிக்கு வியட்நாமில் வீசிய ஷமொலாவேஷ என்றழைக்கப்படும் சூறாவளி கடந்த இருபது வருடங்களில் தென்கிழக்கு ஆசியாவில் வீசிய சூறாவளிகளுள் மிகவும் பலமானது எனக் கருதப்படுகின்றது.

இந்த சூறாவளியின் காரணமாக ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான மழைவீழ்ச்சி எதிர்வரும் நாட்களுக்குத் தொடரக்கூடும் என்றும் ஏற்கனவே பல இடர்களை அனுபவிக்கின்ற குடும்பங்களின் நிலைமையை இது இன்னும் மோசமாக்கலாம் என்றும் ஐநாவின் சிறுவர் நிதியமான யுனிசெவ் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்த சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகள் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. அவர்கள் தாம் சேமித்து வைத்திருந்த உணவுப்பொருட்களை இழந்திருக்கிறார்கள். குடிப்பதற்கும் கழுவுவதற்கும் உணவைச் சமைப்பதற்கும் சுத்தமான நீர் இல்லை. நீர் மற்றும் சுகாதார ஒழுங்கமைப்புகள் சேதமாகியுள்ளன என்று ஐநா நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்கள் கூட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் குறிப்பாக பெண்கள், சிறுவர், வயோதிபர் ஆகியோரது சுகாதாரம் மோசமான நிலையை அடைந்திருக்கிறது. சுகாதார மையங்களும் சேதமடைந்திருப்பதால் மக்கள் சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இவற்றுடன், இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நீந்த முடியாதவர்களாக இருப்பதால், வீசுகின்ற மிக மோசமான காற்றும் பலத்த இரைச்சலோடு பாய்ந்தோடும் வெள்ளமும் மக்கள் மனதில் உளவியல் ரீதியான பாதிப்பைத் தோற்றுவிக்கும் ஆபத்து இருக்கிறது என யுனிசெவ் மேலும் தெரிவித்திருக்கிறது.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்ற மின்வலு, வீதிகள் என்பவற்றை உள்ளடக்கிய, நாட்டின் உட்கட்டமைப்பு சேதமாக்கப்பட்டிருப்பதனால், பல சமூகங்கள் உதவியையோ அன்றேல் பாதுகாப்பையோ பெற்றுக்கொள்ள முடியாத வகையில் ஏனைய சமூகங்களிடமிருந்து தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன.
சூறாவளியில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் 77 இலட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள் என்பதோடு 15 இலட்சம் மக்கள் வரை இந்த இயற்கை நிகழ்வினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேற்படி மக்கள் தொகையில் 177,000 மக்கள் அதிகளவான ஆபத்தில் இருப்பதன் காரணத்தினால் இம் மக்களுக்கு அவரச மனிதாபிமான உதவிகள் முதலில் வழங்கப்பட வேண்டும் என்று வியட்நாமிலுள்ள ஐநாவின் இணைப்பாளர் பணிமனை தெரிவித்திருக்கிறது.

ஐநா அமைப்புகளும் ஐநாவுடன் இணைந்து பணிபுரியும் ஏனைய அமைப்புகளும் அவசர நிவாரண முயற்சிகளுக்கு துணைசெய்வதற்கான பல்வேறு துறைகளை உள்ளடக்கிய தமது நிவாரண செயற்பாடுகளுக்கான திட்டத்தை எதிர்வரும் நாட்களில் வெளியிடும் என்று ஐநா இணைப்பாளர் பணிமனை அறிவித்திருக்கிறது.

அதே நேரத்தில் உடனடியாக அவசரமான நீர், போசாக்கு, சுகாதாரம், கல்வி பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உதவிகளை யுனிசெவ் அமைப்பு வழங்கும் என்றும் அந்தக் குறிப்பு தெரிவிக்கிறது.

மேற்படி சூறாவளியால் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களையும் உதவிகள் அதிகம் தேவைப்படும் மக்களையும் இனங்காண்பதற்கு அரச நிறுவனங்களுடனும் ஏனைய மனிதநேய அமைப்புகளுடனும் தாம் இணைந்து பணியாற்றிவருவதாக அவர்கள் கூறியிருக்கிறார்கள.

பாதிக்கப்பட்டவர்களைத் தேடி மீட்கும் நடவடிக்கையில் வியட்நாமிய இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.