பயிர்ச்செய்கைக்கு போதிய நீர் இன்றி தவிக்கும் மட்டக்களப்பு விவசாயிகள்-ந.குகன்

வடகிழக்கு தமிழர்களின் தாயகப் பகுதியின் பொருளாதாரம் என்பது பலமடையாமல் இருக்க வேண்டும் என்பதில் காலத்திற்குக் காலம் வரும் அரசாங்கங்கள் கவனமாகவே இருந்து வருகின்றன. தமிழர்களின் வளம் அதிகரிக்கும்போது, அவர்களின் உரிமை சார்ந்த விடயங்களும் அதிகரித்துவிடும் என்ற நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், தமிழர்களின் பொருளாதாரம் என்பது பெருமளவு விவசாயத்தில் தங்கியிருக்கின்றது. இன்று இலங்கையில் விவசாய நிலங்களை அதிகளவில் கொண்ட மாகாணங்களுள் ஒன்றாக கிழக்கு மாகாணம் காணப்படுகின்ற போதிலும், விவசாயத் துறையினை பொறுத்தவரையில் புறக்கணிக்கப்பட்டே வருகின்றது.

நாட்டில் வாழும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில், அதிகாரிகளும் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் நிலையும் காணப்படுகின்றது.

அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாகனேரி விவசாயிகள் தண்ணீர் இன்மை காரணமாக தங்களுடைய விவசாயத்தினை மேற்கொள்வதில் பாரிய சிக்கல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

வாகனேரி பிரதேசத்திலுள்ள தவணைக் கண்டம், கக்கரிமடுக் கண்டம், மக்கிளான கண்டம், பருத்திச்சேனை கண்டம், கொடித்தீவுக் கண்டம், தரிசேன கண்டம், வட்டக் கண்டம் ஆகிய கண்டங்களில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இம்முறை பெரும்போக விவசாயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

நீர்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான தவணைக் கண்டத்திலுள்ள அணைக்கட்டு பழுதடைந்துள்ள நிலையில், புதிய அணைக்கட்டினை நிர்மாணிக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு வேலைகள் பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் பூர்த்தி செய்து, விவசாயிகளின் பாவனைக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது.

ஆனால் பெரும்போக விவசாய செய்கை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கடந்த 10ம்ஆ திகதி விவசாய செய்கைக்கு நீர் வழங்குவதாக விவசாய கூட்டத்தில் நீர்பாசனத் திணைக்களத்தினால் வாக்குறுதி வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை விவசாயத்திற்கு நீர் வழங்கப்பட்டவில்லை.

பெரும்போக விவசாய செய்கைக்கு முன்னர் பூர்த்தி செய்து தருவதாக கூறிய அணைக்கக்கட்டு இதுவரைக்கும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் காணப்படுகின்றது. இதனால் நீர் செல்வதற்கான பாதைகள் மண்ணால் மூடப்பட்டுள்ளதுடன், விவசாய நிலத்திற்கு தண்ணீர் செல்லும் வழி தடைப்பட்டு காணப்படுகின்றது.

விவசாய செய்கைக்கு தண்ணீர் இன்மை தொடர்பில் நீர்பாசன திணைக்களத்தினருக்கு விவசாயிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டது. விவசாயி ஒருவரின் வயலின் ஊடாக கை வாய்க்கால் வெட்டப்பட்டு நீர் குறைவாக வழங்கப்பட்டது. வாய்க்கால் உடைந்ததன் காரணமாக நீர் செல்வது தடைப்பட்டு காணப்பட்டது.

அதன்பிற்பாடு விவசாயிகள் வாய்க்கால் உடைந்ததன் காரணமாக ஏற்பட்ட தடையை நீக்கும் வகையில் தடையினை அகற்றிய பொழுதும் வரம்புக்கட்டில் உள்ள மணல்கள் மீண்டும் உடைப்பெடுத்த வண்ணமே காணப்படுவதுடன், இதன் மூலம் கிடைக்கும் தண்ணீர் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய செய்கைக்கு போதுமானதாக அமையாது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே உடனடியாக நீர்பாசன திணைக்களத்தினர் குறித்த அணைக்கட்டினை மிக விரைவாக பூர்த்தி செய்து, விவசாயிகள் பாவனைக்கு வழங்குவதுடன், விவசாயிகளுக்கு நேர்த்தியான முறையில் தண்ணீர் கிடைப்பதற்கு துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தும்; இதுவரையும் எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இதுபோன்று தமிழர்களின் விவசாய செய்கைக்கு தேவையான நீர்வசதிகளை வழங்குவதில் அரசாங்கம் மிகவும் அசமந்தமான போக்கினையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றது.

காலங்காலமாக தமது பிரச்சினைகளை விவசாயிகள் தெரிவிக்கின்ற போதிலும், அந்த பிரச்சினைக்கான தீர்வினை வழங்காமல் இழுத்தடிக்கப்படுவதன் காரணமாக விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைகளை விடுத்து வேறு தொழிலில் இறங்கும் நிலைக்கு செல்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் முறையாக புனரமைக்கப்பட்டு, அணைக்கட்டுகள் முறையாக அமைக்கப்படுமானால், தமிழர்களின் பகுதி பொன் செழிக்கும் பூமியாக மாறும் நிலையேற்படும். இவ்வாறான நிலையேற்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தினாலேயே இவ்வாறான அசமந்தமான செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.