அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பாடம் புகட்டுக: பா.ம.க வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்தியது மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்கு தமிழகத்தில் உள்ள  பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கடந்த  27ம் திகதி  இராமேஸ்வரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்றுக் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். அவர்கள் வழக்கம் போல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து சென்ற இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில், 50-க்கும் மேற்பட்ட மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கற்கள் மற்றும் கண்ணாடி போத்தல்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். மேலும் மீனவர்களின் மீன்பிடி வலைகளைச் சேதப்படுத்தியாதாகவும் குற்றம்சுமத்தப்படுகின்றது.

இந்தத் தாக்குதலில் மீனவர் சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்திருந்தார்.

இது குறித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சார்பாக கருத்துத் தெரிவித்த மீனவப் பிரதிநிதி “தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கூறியிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. அமைச்சரின் கருத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றோம். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக சொல்கிறார்கள். மத்திய அரசு கச்சதீவை மீண்டும் மீட்டுத் தந்தால் எல்லை தாண்ட மாட்டோம் என்று உறுதி கூறுகின்றோம்.

மீனவர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். அல்லது கச்சதீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.” என்றார்.

இலங்கைத் தாக்குதல் குறித்து, மதிமுக கட்சியின் தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று நேற்று அல்ல, கடந்த 40 ஆண்டுகளாகவே, தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகின்றார்கள். கிட்டத்தட்ட 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்று இருக்கின்றது. ஆயிரக்கணக்கான மீனவர்களைப் பிடித்துக்கொண்டு போய், பல மாதங்கள் சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்.” என்று இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சேவின் அமைச்சரவை பதவியேற்றது! டக்ளஸ் தேவானந்தா, ஆறுமுகம் தொண்டமானுக்கும் பதவி! | Mahinda Rajapaksa's new Cabinet sworn-in - Tamil Oneindia

இந்தத் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, திமுக-வின் பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது” எனக் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை வடக்கு மாகாண மீனவர்கள் மற்றும் மீன்வளத்துறையில்,  நிலவும் பிரச்சினை குறித்து, கிளிநொச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இலங்கையின் கடல் தொழிற்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,

“தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் கற்கள் மற்றும் போத்தல்களைக் கொண்டு, தாக்குதல் நடத்தியதாகக் கேள்விப்பட்டேன். இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட இலங்கைக் கடற்படை அதிகாரியைத் தொடர்பு கொண்டு எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன்.” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்தக்கருத்தைக் கண்டித்துள்ள பா.ம.க, “அவர் மனிதத்தன்மையற்ற மனப்பான்மை கொண்டவர் என்பதையே அவரது பேச்சு காட்டுகிறது என்று கண்டித்துள்ளது.

இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “ஒருவேளை தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையில் மீன் பிடித்தனர் என்று வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும் கூட, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களைத் தாக்க எந்தப் பன்னாட்டு மீன்பிடிச் சட்டமும் அனுமதிப்பதில்லை. எல்லை தாண்டிய மீனவர்களை எச்சரித்து அனுப்பலாம். கைது செய்து அவர்களின் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கலாம். கைது செய்து சிறையில் அடைக்கலாம் என்பதுதான் சட்டம்.

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயல் இந்திய அரசின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலாகும். இதற்காக இலங்கையை இந்திய அரசு மிகக்கடுமையாக கண்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, டக்ளஸ் தேவானந்தா மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி தமிழ்நாட்டிற்கு எதிராகவோ, இந்தியாவுக்கு எதிராகவோ பேச அஞ்சும் அளவுக்கு டக்ளஸ் தேவானந்தாவிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.