இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட தூதுக்குழு முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவை லை சந்தித்தது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட தூதுக்குழு கொழும்பு விஜேராமையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்துள்ளது.
நட்புறவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முக நுால் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சில உலக வல்லரசுகள் எதிர்த்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா போன்ற நாடுகள் நிபந்தனையின்றி இலங்கையுடன் வலுவாக இருந்ததாகவும், அன்றிலிருந்து இன்று வரை இருதரப்பிற்கிடையிலான உறவு வலுவாகவும் மாறாமலும் இருப்பதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை பலப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநுாலில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், பந்துல குணவர்தன , மஹிந்தானந்த அளுத்கமகே , பவித்ரா வன்னியாரச்சி உள்ளிட்டோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.