இந்தியத் துணைக்கண்டத்தின் வடகிழக்கு தேசங்களில் ஒன்றாகிய மணிப்பூர் மாநிலத்தில் மெய்த்தி சமுதாயத்துக்கும் குக்கி, நாகா, ஸோ ஆகிய பழங்குடிச் சமுதாயங்களுக்கும் இடையில் தொடர்ந்து வரும் இன வன்முறைக்கு உடனடிக் காரணங்கள் பலவும் சொல்லப்பட்டாலும், அடிப்படைக் காரணம்… குக்கி முதலான பழங்குடிகளுக்கு எதிரான மெய்த்தி சமுதாயத்தின் பேரினவாத ஒடுக்குமுறைதான். சிங்களப் பேரினவாதம் போன்றதே மெய்த்திப் பேரினவாதம்.
இந்தப் பேரினவாதத்துக்கு ஆர்எஸ்எஸ்-பாசக தமது இந்துத்துவ அரசியல் நோக்கங்களுக்காக ஊக்கமளித்து வருகின்றன. மணிப்பூரை ஆளும் பாசக மாநில அரசு – முதலமைச்சர் பிரென் சிங் – வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கு மாறாக, குக்கிகள் மீது வெறுப்புமிழும் பேச்சுகளைக் கொண்டு வன்முறையைத் தூண்டி வருகிறது. மணிப்பூர் வன்முறையை அனைத்திந்திய அளவில் இந்துத்துவப் பிரித்தாளும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதுதான் உள்துறை அமைச்சர் அமித்சாவின் ஒரே கவலை.
இந்தியாவுக்கு ஒரு தலைமையமைச்சர் இருக்கிறார். அவரைப் பிரதமர் நரேந்திர மோதி என்றும் சொல்வார்கள். ‘உலகம் சுற்றும் வாலிபர்’ என்று பெயர் பெற்றுள்ள திருவாளர் மோதி எப்போதாவது இந்தியா வருகிறார். அப்போதும் அவருக்கு மணிப்பூர் பற்றிப் பேச நேரம் இருப்பதில்லை. அவரைக் காரியக்கார ஊமை என்றுதான் சொல்ல வேண்டும்.
மெய்த்தி சமுதாயத்துக்கு அட்டவணைப் பழங்குடித் தகுநிலை வழங்கும்படி நடுவணரசுக்குப் பரிந்துரை செய்யும் படி மாநில அரசுக்குப் 2023 ஏப்ரல் மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைதான் இந்த வன்முறைக்கு உடனடித் தூண்டுதலாக அமைந்தது. அட்டவணைப் பழங்குடித் தகுநிலை கிடைத்தால் மெய்த்தி சமுதாயம் பெறக்கூடிய நன்மை… இப்போது பழங்குடிச் சமுதாயங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலத்துக்கு உரிமை கோர முடியும்.
மே திங்கள் முழுக்க தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்கள் நடந்து, இரு தரப்பும் ஆய்தந்தரித்திருந்த நிலையில் உள்நாட்டுப் போரையொத்த நிலைமை தோன்றியது, சட்டம் ஒழுங்கு அடியோடு குலைந்தது. ருவாண்டா இனவழிப்புப் போன்ற நிலைமைதான் காணப்பட்டது
பாசகவும் நடுவண் அரசும் மாநில அரசும் மக்களைப் பிரிக்கும் அரசியல் ஆட்டம் ஆடி வருவது நரவேட்டையை மோசமாகியுள்ளது. ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக அனைவரும் வன்முறையால் துயருற்றுள்ளனர், 300க்கு மேற்பட்ட ஏதிலி முகாம்களில் 50,000க்கு மேற்பட்ட மக்கள் தங்கியிருக்க, இலட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்கள்.
உண்மையில் பாசக மாநில அரசு வனப் பகுதிகளிலிருந்து ‘சட்டப்புறம்பான’ குடியேறிகளை’ அகற்றும் முயற்சிகளை இந்த ஆண்டு சனவரியில் தொடங்கிய போதுதான் நிலைமை மோசமாயிற்று. பழங்குடியினரான வனவாழ்வோரை ‘வன்பறிப்பாளர்கள்’ என்று அறிவித்து சுராசந்த்பூர், காங்க்போக்பி, தெங்னூபால் மாவட்டங்களில் மாநில அரசு நிலவெளியேற்ற நடவடிக்கை தொடங்கிற்று.
நாடெங்கும் பாசக கையாளக் கூடிய அதே வழிமுறைதான், காலங்காலமாய் இருந்து வரும் இனக்குழுப் பதற்றங்களை அது தன் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக முற்றச் செய்து வருகிறது. பாசக இரு சமுதாயங்களுக்கும் கூட்டாளி போல் நடித்துக் கொண்டே அவற்றுக்கிடையிலான வரலாற்றுவழிப் பதற்றங்களின் இடைவெளியை அகலப்படுத்தி வருகிறதே தவிர, தீர்வு நோக்கிய உரையாடலை எளிதாக்க எம்முயற்சியும் செய்யவில்லை.
இப்போதைய நிலவரத்தில், அரம்பை தெங்கோல், மெய்த்தி லீபுன் ஆகிய மெய்த்தி பேரினவாத ஆய்தக் குழுக்களே குக்கி இன மக்களுக்கு எதிராகப் படுமோசமான வன்முறைக் கொடுமைகள் செய்துள்ளன. இனவழிப்புக்குரிய வெறுப்புமிழும் பேச்சுகளும், என்ன செய்தாலும் தட்டிக் கேட்கவும் தண்டிக்கவும் யாருமில்லை என்று பேரினத் திமிர்த்தன வெளிப்பாடுகளும் இத்துடன் சேர்ந்து கொண்டன. இவற்றுள் முதற்குழு ஒரு பழமைமீட்புக் குழுவாகும். இரண்டாம் குழு தெள்ளத் தெளிவாகவே இந்துப் பேரினவாதச் சார்புடையதாகும். முதலமைச்சர் பிரேன் சிங் இந்தக் குழுக்களுடன் நெருங்கிய ஈடுபாடு உடையவர். இரு குழுக்களுமே குக்கி சமுதாயத்தை “சட்டப்புறம்பான வெளியார்” என்றும் “போதைப் பொருள் திகிலியர்கள்” (நார்கோ பயங்கரவாதிகள்) என்றும் இழிவாகப் பேசுகின்றன. மெய்த்தி லீபுன் தலைவர் ஊடகச் செவ்வி ஒன்றில், மைத்திகள் பூசலுக்குரியவையாகக் கருதும் பகுதிகளில் குக்கிகள் “துடைத்தெறியப்படுவார்கள்” என்று வெளிப்படையாகவே அறிவிக்கத் தயங்கவில்லை. குக்கி சமுதாய மக்கள் “சட்டப்புறம்பானவர்கள்”, “வெளியார்கள்”, “குடும்பத்தில் இடம்பெறாதவர்கள்” “மணிப்பூருக்குச் சொந்தமல்லாதவர்கள்”, மணிப்பூரில் “குடக்கூலிகள்” என்றெல்லாம் அவர் வண்ணித்தார்.
சிறுபான்மைச் சமுதாயம் ஒன்றைச் “சட்டப்புறம்பானவர்கள்” என்று மாந்த நீக்கம் செய்கிற இந்த மொழியைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சரும் அசாம் முதலமைச்சரும் அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு செய்யும் முயற்சியின் போது பேசினார்கள். இப்போது அதே மொழி வடகிழக்கில் மற்றுமொரு மாநிலத்துக்குப் பரவியுள்ளது. வெறுப்பும் வன்முறையும் அயலார் மீது வன்மவெறியுமான தீயை மூட்டி வருகிறது.
இப்போது தொடரும் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் மிகப் பெரும்பாலார் குக்கி சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று செய்திகள் காட்டுகின்றன. பள்ளிகள், தானியக் களஞ்சியங்கள், வீடுகள் இவற்றோடு, குக்கிகளின் 200க்கு மேற்பட்ட கிறித்துவ தேவாலயங்கள் கொளுத்தபப்ட்டுள்ளன.
இன்று பொய்ச் செய்தி எனப்படும் வதந்திகள் பரப்பி, சமுதாயங்களுக்கிடையே மோதல்களைத் தூண்டி விடுவது – காலங்காலமாய்க் கையாளப்படும் இந்த உத்தி – பெண்களை எளிதில் இலக்காக்கும் நடைமுறை தொடர்கிறது. மெய்த்திப் பெண்களை குக்கிகள் வன்புணர்வு செய்து விட்டார்கள் என்று பேரின மெய்த்திக் குழுக்கள் பரப்பிய பொய்ச் செய்தியைச் சாக்கிட்டு குக்கி இனத்தவரை அடித்துக் கொல்வதும் குக்கி-ஜோ பெண்களை வன்புணர்வு செய்வதுமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெறிக் கும்பல்கள் “அவளைக் கெடு, அவளை வதை செய்” என்று கத்திக் கொண்டே பெண்களைத் தாக்கியதாகச் செய்திகள் வந்துள்ளன.
தற்சார்பானவர்களும் கட்சிசார்பற்றவர்களுமான குடியியல் சமூக உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் கோரிக்கைகள்:
தலைமையமைச்சர் வாய்திறந்து பேசவும் மணிப்பூரின் நடப்பு நிலைமைக்குப் பொறுப்பேற்கவும் வேண்டும்; உண்மைகளை நிறுவவும், நீதிக்கான அடித்தளத்தை அணியமாக்கவும், மணிப்பூரில் இரு சமுதாயங்களையும் வேறுபடுத்தும் கொடும் புண்ணை ஆற்றவும், தூண்டி வளர்க்கப்படும் பிரிவையும் வெறுப்பையும் தணிக்கவும்… நீதிமன்றக் கண்காணிப்பில் ஒரு சிறப்புத் தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் ஆய்தப் படைகள் சிறப்பதிகாரச் சட்டத்தின் ஆளுகையில் மணிப்பூரில் இந்திய இராணுவத்தினர் செய்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக மணிப்பூர் பெண்கள் நடத்திய (இரோம் சர்மிளாவின் பட்டினிப் போர் உள்ளிட்ட) போராட்டங்கள் உலகறிந்த நிகழ்வுகள். இப்போதும் மோதல் பகுதிகளில் பெருமளவில் பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. இந்தக் குற்றங்களை விரைவு நீதிமன்றம் அமைத்து நீதி வழங்க வேண்டும். ஏதிலியர் வீடு திரும்ப அமைதியான சூழல் ஏற்படச் செய்ய வேண்டும்.
மணிப்பூர் மக்களுடன், குறிப்பாக இனவழிப்புக்கு ஆளாகி வரும் பழங்குடிகளுடன் தமிழ் மக்கள் தோழமை கொள்ள வேண்டும்.
இன்றைய மணிப்பூர் நாளை இந்தியா ஆகலாம். பாசக-ஆர்எஸ்எஸ் பிரித்தாளும் அரசியல் தமிழ் மக்களையும் பிரித்தாள முற்படும். மணிப்பூர் நமக்கு ஒலிப்பது எச்சரிக்கை மணி!