நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் சிறையா? 32 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்க மறுப்பது முறையா?

WhatsApp Image 2023 06 28 at 8.49.32 PM நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் சிறையா? 32 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்க மறுப்பது முறையா?

1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அப்பாவி 7 தமிழர்களில் பேரறிவாளனின் விடுதலைக்கு பிறகு கடந்த 2022 நவம்பர் மாதம் 11-ஆம் தேதி முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோரையும் முழுமையான விடுதலை என்று உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தினை நடைமுறைபடுத்தி விடுதலை செய்தது. ஆனால் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை இலங்கை குடியுரிமையை கொண்டவர்கள் எனக் கூறி அவர்கள் விடுதலை செய்யப்படாமல் திருச்சி சிறைமுகாமில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மீண்டும் சிறைப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இது முழுக்கமுழுக்க அரசின் மனிதஉரிமை மீறல் மட்டுமல்லாது சட்டவிரோத செயல்பாடும் ஆகும்.

எழுவர் விடுதலைக்காக தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், கட்சிகள், மாணவர்கள், இளைஞர்கள் என்று மக்கள்திரள் போராட்டம் ஒருபக்கமும், சட்டப்போராட்டம் மறுபக்கமும் நடந்துவந்த நிலையில் அன்றைய அதிமுக அரசு எழுவரையும் விடுதலைச் செய்ய 2014-ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. தீர்மானத்தை நிறைவேற்றியவுடன் தனது கடமை முடிந்துவிட்டதாக கருதி எழுவரையும் பிணையில் விடுதலையை மறுப்பது, மருத்துவ சிகிச்சைக்கு முறையான அனுமதி தரமறுப்பது என்று தொடர்ச்சியாக அதிமுக அரசு செய்துவந்தாலும் நீதிமன்றத்தின் உத்தரவின்படியே பிணையில் வெளிவந்தனர்.

எழுவரின் விடுதலை தொடர்பாக ஆளுநரும் – உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசும் மாநில அரசுகளின் அதிகாரம் தொடர்பான பல்வேறு விவாதங்களையும் கேள்விகளையும் எழுப்பி எழுவரின் விடுதலையில் திட்டமிட்டு தாமதப்படுத்தி வந்தநிலையில் கடந்தஆண்டு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு முழுமையான விடுதலை கொடுத்தது. இந்த தீர்ப்பினை கொண்டு மீதமுள்ள அறுவரையும் விடுவித்தது அதே உச்சநீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் வெளிநாட்டினவர்கள் என்றுக் கூறி திருச்சி சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டனர். நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் சிறைக் காவலில் இருந்து முகாம் சிறைக்குள் அடைக்கப்பட்ட அவலம் என்பது தமிழ்நாடு அரசுக்கு இவர்களின் மீதான அக்கறையின்மையா? அல்லது இந்திய அரசின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கையா? என்பதை ஆளும் திமுகஅரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.

திருச்சி சிறப்பு சிறைமுகாம் என்பது சட்டவிரோத ஊடுருவாளர்கள், வெளிநாட்டு குடியுரிமை பெற்று இந்தியாவில் போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள், போலி கடவுச்சீட்டு மூலமாக வந்தவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான தனித்த சிறையாகும். நீதிமன்றமே முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கான விடுதலையை அறிவித்துவிட்ட பிறகு நால்வரையும் சிறப்பு சிறைமுகாமில் சிறைப்படுத்தி இருப்பது “32 ஆண்டுகளாக மறுக்கப்பட்ட, 32 ஆண்டுகளுக்கு பிறகு பெறப்பட்ட” நீதியினை மறுப்பதாக உள்ளது. இதுநாள் வரை இலங்கை அரசும் சிறைப்பட்ட போதும், விடுதலைக்கு பிறகும் நால்வரையும் தங்கள் நாட்டு குடிஉரிமை உள்ளவர்கள் என்று கோரிக்கைக் கூட வைத்தது கிடையாது. இலங்கையில் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான பாரிய இனப்படுகொலைக்கு பிறகும் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழும் சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லாத நிலையில், நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்கும் முடிவும் பரிசீலனையில் இருப்பதாக கூறியிருப்பது நால்வர் உயிரை கேள்விக்குள்ளாக்கும் செயலாக தான் அமையும்.

சிறப்பு முகாமில் அடைக்கும்போது  திருச்சி மாவட்ட ஆட்சியர் நால்வர் விடுவிப்பு தொடர்பாக அவர்கள் எந்த நாட்டிற்கு செல்ல விரும்புகின்றனரோ அந்த நாட்டிடம் தூதகர அடிப்படையில் பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஆனால் அரசு நிர்வாகம் விடுதலை தொடர்பாக எவ்வித நகர்வினையும் எடுத்ததாக தெரியவில்லை. மாறாக அந்த நால்வருக்கும் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு அதனை கேட்டு போராடக் கூடிய சூழல்தான் நிலவுகிறது. சமீபத்தில் ராபர்ட் பயாஸ் அவர்கள், நடைப்பயிற்சி செய்வதற்கு கூட அனுமதியில்லை என்று கூறி 8 நாட்களுக்கும் மேலாக பட்டினிப் போராட்டம் நடத்தினார். பகலில் கூட சிறைக்கம்பிகளை திறந்துவிடாமல் அடைத்துவைத்தும், உடல்நலனை பேணுவதற்கு நடைபயிற்சி செய்வதற்குக்கூட தடைவிதித்தும், சிறையில் காவலர்களை குவித்து வைத்து தனிமை சிறையில் அடைத்து வைத்திருப்பது என்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இதனால் 32 ஆண்டுகால சிறைக்கொட்டடி கொடுத்த மன உளைச்சலையும், உடலியல் நோய்களையும் சிறப்பு முகாம் சிறைக்கொடுமை தீவிரப்படுத்தி வருகிறது.

பேரறிவாளன், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் விடுதலைக்கு பின்பு பொதுமக்களுடன் இயல்பாக வாழ்ந்துவரும் நிலையில் நால்வரையும் குற்றவாளிகளுடன் சிறைப்படுத்தாமல் நால்வரையும் அவர்களின் உறவினர்களுடன் தற்காலிகமாக தங்கவைப்பது, ஈழத்தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வாழும் அவர்களின் உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக தங்கவைப்பது போன்ற நடவடிக்கைகளை எடுத்து நால்வரும் எந்த நாட்டில் நிரந்தரமாக குடியிருக்க விருப்பம் தெரிவிக்கின்றனரோ அந்த நாட்டிற்கு செல்ல கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு முதலியவற்றை மத்திய மாநில அரசுகள் தூதரக அளவில் விரைந்து நடைமுறைகளை செய்ய வேண்டும் அல்லது இந்தியாவிலே இருக்க விரும்பினால் ஈழத்தமிழர்களுக்கு அரசு கொடுத்துள்ள சட்டநிலை தகுதி மற்றும் உரிமைகளை தருவதற்கான நடைமுறைகளை செய்து நால்வருக்கான மறுக்கப்படும் நீதியை தரவேண்டும்.

 “எழுவர் விடுதலை என்பது தமிழ்நாட்டின் மறுக்கப்பட்ட அரசியல் உரிமைக்கான முழக்கமாகும்.” எழுவரின் விடுதலையில் தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு அளப்பரியதாகும். தோழர் செங்கொடி என்ற இளம்பெண்ணின் தழல்ஈகம் தான் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குக் கயிற்றை எரித்து சாம்பலாக்கியது. எழுவர் விடுதலைக்காக தமிழ்நாட்டு மாணவர்கள், இளைஞர்களின் எழுச்சிதான் அரசியல் கட்சிகளையும், மக்களையும் போராட்டக்களத்தில் இணைய வைத்தது. இத்தகைய போராட்டத்திற்கு பிறகு எழுவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு விடுதலைக்கு பின்னும் தொடரும் சிறைக்கொடுமையானது இந்திய நாட்டில் சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்தான கேள்விகள் எழுகிறது. 2௦14லில் இந்தியாவின் பிரதமராக வந்த நரேந்திர மோடி ஈழத்தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளவர் போலவும், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு பகுதியில் இந்திய தலைவர்கள் அதிக கவனம் செலுத்துவது போன்ற அரசியல் நகர்வுகள் மறுவாழ்வு முகாமில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு இரட்டைகுடியுரிமை தருவதிலும், இலங்கைக்கு எதிரான 2௦௦9 இனஅழிப்பு தொடர்பான பன்னாட்டு தீர்மானங்களிலும் தமிழ்நாட்டின் அரசியல் நிலைபாட்டிற்கு மாறாக ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அலட்சியம் காட்டுவது என்பது இந்தியா தனது வெளியுறவு கொள்கையில் துளியளவும் மாற்றம் கொள்ளாமல் இருப்பதை காட்டுகின்றது. இந்தநிலையே நால்வர் விடுதலையிலும் தொடருவதை தமிழர்கள் புரிந்துக்கொண்டு மறுக்கப்படும் தமிழ்நாட்டு உரிமைக்கு குரல் கொடுப்பதும், களம் காண்பதும் கோரிக்கையினை வென்றெடுப்பதும் தமிழ்த்தேசிய இனத்தின் மக்களான நமது கடமையாகும்.

தமிழ்த்தேச மாணவர் இளைஞர் இயக்கம்,
தமிழ்நாடு