கிளிநொச்சியில் புலிகளின் பயிற்சி முகாம் உள்ளதாக போலி தகவல் வெளியிட்ட நபர் கைது

கிளிநொச்சி, பளை பகுதியில் விடுதலைப் புலிகள் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படும் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

46 வயதுடைய ஒருவரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பின் புறநகரான பெல்லன்வில பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கிளிநொச்சி – பளை பகுதியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டிருந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அரசாங்கம் நேற்று (18) தெளிவுபடுத்தியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அது உண்மைக்குப் புறம்பான தகவல் என்று தெரியவந்ததாக அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி, அக்கராயன்குளம் காவல் எல்லைக்குட்பட்ட கண்ணகிபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பகுதியிலுள்ள இடமொன்றை இலக்குவைத்து இத்தகைய தகவல்கள் வெளியாகின.

குறித்த பகுதியானது 1919ஆம் ஆண்டு இலக்கம் 7064 கொண்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒன்றாகும் என்று அமைச்சரவை பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.