கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியை விடுவிக்க முடியாதென அரசாங்கம் அறிவிப்பு

பாதுகாப்பு காரணங்கள் காரணமாக கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவிக்க முடியாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அறிக்கைக்கு அமைய ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரால் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஏ9 வீதி காக்கா கடைச் சந்தியில் அமைந்துள்ள கிளிநொச்சி ஊடக அமையத்தின் காணியினையும் கட்டடத்தினையும் விடுவித்து தருமாறு கிளிநொச்சி ஊடக இல்லம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை முன்னதாக அனுப்பியிருந்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பில் ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சிடம் பதில் கோரியுள்ளது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் W.M.S.P. வீரசிங்கவால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2009 இற்கு முன்னர் கிளிநொச்சி ஊடக இல்லமாக செயற்பட்ட குறித்த காணியும் கட்டத்தையும் தற்போது இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்

இந்த காணிக்கு ஒரு புறமாகவுள்ள நிலம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு விடுவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் யோகர் சுவாமிகள் நிலையத்திற்கு விடுவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஊடக அமையத்தின் காணியும் கட்டடமும் மாத்திரமே விடுவிக்கப்படாத நிலையில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.