தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு நிதியளித்தமை மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜையான முஹம்மது அஸ்மின் என்பவருக்கு இந்தியாவின் கேரள உயர் நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய புலனாய்வு முகவரகத்தின் விசேட நீதிமன்றம் அஸ்மினுக்கு பொதுமன்னிப்பு வழங்கியதோடு, அரசுத் தரப்புக்கு உதவும் சாட்சியாக மாற அவர் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவரைத் தொடர்ந்தும் தடுத்து வைத்திருக்க முடியாது என்று நீதியரசர்களான ராஜா விஜயராகவன் மற்றும் கே.வி.ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழு தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தனிப்பட்ட ஆபத்துகளுக்கு மத்தியில் சாட்சியமளிக்க முன்வருபவர்களைப் பாதுகாப்பது அவசியம் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், கேரள சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அஸ்மினுக்கு உடனடியாக உரிய பாதுகாப்பு வழங்குமாறு கேரள உள்துறை திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தலா 100,000 இந்திய ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளுடன் பிணைப் பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும் என்று அவருக்கு பிணைய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டை ஒப்படைப்பதுடன், வதிவிட முகவரி மற்றும் தற்போதைய கைபேசி இலக்கத்தை இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரகத்துக்கு வழங்க வேண்டும்.
விசேட நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி எர்ணாகுளம் மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது என்பதுடன், ஒவ்வொரு சனிக்கிழமையும் விசாரணை அதிகாரியின் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் அவருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
வழக்கின் ஏனைய சந்தேகநபர்களைத் தொடர்பு கொள்ளவோ, சாட்சிகளுக்கு இடையூறு விளைவிக்கவோ, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிணை உத்தரவானது அவர் இந்தியாவில் தங்குவதற்கான உரிமையை வழங்காது என்றும், அவரது குடிவரவு நிலை தொடர்பான சட்ட நடவடிக்கைகளைத் தடுக்காது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது



