இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு எதிராக பிடியாணை

இராஜாங்கனை சத்தாரத்ன தேரருக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) பிடியாணை பிறப்பித்துள்ளது.

சமூக ஊடகங்களில் மத நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதவான் பசான் அமரசேன, அவரது பிணைதாரர்களுக்கு அறிவிப்புகளை அனுப்புமாறும் உத்தரவிட்டார்.

குற்றவியல் புலனாய்வுத் துறை சமர்ப்பித்த மனுக்களைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

அண்மையில் அநுராதபுரம் பகுதியில் அரசாங்கத்துக்கு எதிராக பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த இவர், பௌத்த பிக்குகள் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.