சிங்கப்பூர் செல்ல கோட்டாபயவுக்கு தடை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (25) நிராகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு அமைய, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை மனுவொன்றை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்று(25) நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலையாகி இருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக அவர் மீது விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கும்படி அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி கோரி, கோட்டாபய ராஜபக்சவின் சட்டக் குழுவினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேன வழக்கின் தீர்மானத்தை இன்று அறிவிப்பதாக தெரிவித்திருந்தார்.

அந்தநாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சையைத் தொடர்ந்து, கோட்டாபயவுக்கு சிங்கப்பூரில் மேலதிக சிகிச்சை தேவைப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய, தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரிட் மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 05 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று (25) திகதி நிர்ணயித்தது.

அன்றைய தினம் மனு தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துமாறும் நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது.