சுகாதார ஒழுங்கு விதிகளைப் பின்பற்றாது அளவுக்கு அதிகமான பக்தர்கள் வருகை தந்தமையால் மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தை 14 நாள்களுக்கு மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, சுகாதார ஒழுங்குவிதிகளை மீறியமை தொடர்பில் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யவும், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதமகுருக்கள் ஆகியோரை 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுத்தவும் அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்று முன்தினம் நடைபெற்ற தீர்த்தோற்சவத்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர் என்று மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்த நிலையில் அது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்திருந்தன.
ஆலய உற்சவம் தொடர்பாக கடந்த கொரோனா செயலணி கூட்டத்தில் 100 பேருக்கு அனுமதி வழங்கியிருந்த நிலையில், அது பின்பற்றப் படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஜ்.வாசுதேவன் தலைமையில் நேற்று நடைபெற்ற மண்முனை வடக்குக்கான கொரோனா செயலணிக் கூட்டத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அது குறித்து நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்சுகத் மாசிங்க, மட்டக்களப்பு மாநகர பிரதி ஆணையாளர் கே.சிவராஜா, மட்டக் களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் கிரிசுதன் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.