புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்புக்கு நீதி கேட்டு போராடும் தமிழ் இனத்தின் முக்கிய நகர்வுகள் புலம்பெயர் தேசங்களை மையமாகக் கொண்டே தற்போது இயங்குகின்றது. அதுவே சிறீலங்கா அரசுக்கு சவாலான விடயமும் கூட.

மேற்குலக சமூகமும், அதனைச் சார்ந்த மனித உரிமை அமைப்புக்களும் அண்மைக் காலமாக சிறீலங்கா அரசு மீது மேற்கொண்டு வரும் அழுத்தங்கள் என்பது மிகப்பெரும் சவலாக எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதை தற்போதைய சிறீலங்கா அரசு நன்கு அறியும். சுருக்கமாக கூறப்போனால், தற்போதைய சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா நிம்மதியாக உறங்க முடியாத நிலை ஒன்றே மெல்ல மெல்ல உருவாகி வருகின்றது.

சிறீலங்கா படை அதிகாரிகள் மீது அமெரிக்க அரசு கொண்டு வந்த பயணத்தடை ஒருபுறம் இருக்க, கடந்த மாதம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் கருத்து வழங்கிய அனைத்துலகத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்களில் பலர் சிறீலங்காவில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்பதை கூறியதும், ஒரு மாற்றத்திற்கான காரணம்.

எனவே தான் சிறீலங்கா அரசின் தற்போதைய பார்வை புலம்பெயர் தேசம் நோக்கி நகர்ந்துள்ளதுடன், தமிழ் மக்களுக்கு ஆதரவாக அல்லது அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புக்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது திரும்பியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் சிறீலங்கா அரசு புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தை தடுப்பதற்கு நிழல் நடவடிக்கை பிரிவு ஒன்றை ஏற்படுத்தியுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் கெக் மக்டேமொட் மீது அண்மையில் சிங்கள மக்கள் மேற்கொண்ட எதிர் நடவடிக்கையானது அவுஸ்திரேலியாவில் உள்ள சிங்கள மக்களால் மேற்கொள்ளப்பட்டது ஒன்றல்ல; மாறாக அதனை சிறீலங்கா அரசு புலம்பெயர் சிங்கள மக்கள் என்ற போர்வையில் ஒருங்கிணைத்துள்ளது என்பது தெளிவாகியுள்ளது. அதனை அவரே தெரிவித்துள்ளார்.

அதாவது எனக்கு எதிராக சிங்களவர்கள் சேகரித்த கையெழுத்து நடவடிக்கையில் கையொப்மிட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அவுஸ்திரேலியாவை சார்ந்தவர்கள் அல்ல, அவர்கள் வேறு நாடுகளில் வசிப்பவர்கள். எனவே எனக்கு எதிரான இந்த நடவடிக்கையை சிறீலங்கா அரசே ஒருங்கிணைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு உலகம் எங்கும் பரந்து வாழும் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை ஆவணப்படுத்தி வருவதுடன், சிறீலங்கா அரச தலைவருக்கு எதிராக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு நடவடிக்கையிலும் உதவிகளை வழங்கிய அமைப்பான அனைத்துலக உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா மீது வழக்கு ஒன்றை சிறீலங்கா அரசின் ஆதரவுடன் அதன் உள்நாட்டு புலனாய்வுப் பிரிவின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே பதிவு செய்துள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியோரிடமும் அதற்கான முறைப்பாடுகளை அவர் சமர்ப்பித்துள்ளார்.z p01 SIS Director புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சூக்காவின் நடவடிக்கை தொடர்பில் தாம் இந்த முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக சாலேயின் பிரதம வழக்கறிஞர் பாசன் வீரசிங்கா தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சாலே மிகவும் அதிகளவான நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர். 2006 ஆம் ஆண்டுப் பகுதியில் யாழ். மாவட்டத்தில் நடந்த பெருமளவான கடத்தல்கள் மற்றும் படுகொலைகளை இவரின் படையணியே முன்னின்று மேற்கொண்டது. ஈ.பி.டி.பியின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் பெருளவான தமிழ் மக்கள் காணாமல் போயிருந்தனர்.

அது மட்டுமல்லாது, விடுதலைப்புலிகளின் கப்பல் வலையமைப்பு, வழங்கல் நடைமுறைகள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள நிதி சேகரிக்கும் செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கையிலும் அவர் முன்னணியில் நின்று செயற்பட்டிருந்தார். எனவே தான் பத்து வருடங்களில் மேஜர் தரத்தில் இருந்து பிரிகேடியராக அவர் பதவி உயர்வு பெற்றிருந்தார்.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னரும், ஆவா குழு என்ற குழுவை யாழ் மாவட்டத்தில் உருவாக்கி தமிழ் மக்களை தொடர்ந்து ஒரு அச்சமான சூழ்நிலையில் வைத்திருப்பதிலும், இராணுவ அழுத்தத்தை அங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

அது மட்டுமல்லாது, 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் இடம்பெற்ற படைத்துறை மாநாட்டில் கலந்து கொண்டு விடுதலைப்புலிகளின் புலம்பெயர் நடவடிக்கைகளை எவ்வாறு அழிப்பது என்பது தொடர்பான கருத்துரைகளையும் வழங்கியிருந்தார். அப்போது அவர் சிறீலங்கா படை புலனாய்வுத் துறையின் வெளிநாட்டு பிரிவின் தலைவராக பணியாற்றியிருந்தார்.

தெற்கிலும், சன்டே லீடர் ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்காவின் படுகொலை ஊடகவியலாளர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டது என்பவற்றிலும் இவரின் பங்கு முக்கியமானது. முன்னர் பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய ராஜபச்சா இருந்த போது அவரின் இரகசிய புலனாய்வு நடவடிக்கை பிரிவை சாலேயே வழிநடத்தியிருந்தார்

 

Sandya Eknaligoda1 புலம்பெயர் தேசங்களில் கட்டியமைக்கப்படும் சிறீலங்கா அரசின் புலனாய்வு வியூகம்- வேல்ஸ் இல் இருந்து அருஸ்

 

மகிந்தா குடும்பத்தின் தீவிர விசுவாசியான அவர், 2015 ஆம் ஆண்டு மைத்திரி அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டில் புலனாய்வுத்துறையின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். மைத்திரிக்கு எதிரான இராணுவப் புரட்சி தொடர்பில் பேராசிரியர் சரத் வியஜசூரியா மைத்திரியை எச்சரிந்திருந்தார்.

தற்போது சிறீலங்காவின் உள்நாட்டு புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றும் சாலே, சூக்கா மீது வழக்கு தொடுக்க முற்பட்டு நிற்பதும், கனடாவில் இனப்படுகொலை கல்வி வராத்தை தடுப்பதில் சிங்கள மக்கள் முன்நின்று செயற்பட்டதும், அவுஸ்திரேலியா நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக சிங்களவர்கள் மிக விரைவாக அதிகளவாக கையெழுத்துக்களை திரட்டியிருந்ததும், மிகப்பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

அதாவது புலம்பெயர் நடவடிக்கைகளை ஒழிப்பதற்கு சிறீலங்கா அரசு அதன் புலனாய்வுத்துறையின் உதவியுடன் கண்ணுக்குத் தெரியாத நிழல் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி செயற்பட்டு வருகின்றது. எனவே இதனை முறியடிப்பதற்கு நாம் தயாராக வேண்டும்.

சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள், அவர்களின் வெளிநாட்டு தூதரகங்கள், வெளிநாடுகளில் உள்ள சிங்கள மக்கள், சிங்கள அமைப்புக்கள் ஆகியவை தொடர்பில் நாம் அதிக அவதானம் எடுத்து செயற்படவேண்டும். அப்போது தான் அவர்களின் நடவடிக்கைகளை இலகுவாக முறியடிப்பதன் மூலம் எமது விடுதலைத் தீயை அணையாது பாதுகாக்க முடியும்.