சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று கூறவேண்டாம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு

”ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்ததாவது,

“ஊழல், படுகொலைகள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்கும் அரச அதிகாரிகளை எதிர்க்கட்சியினர் எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.

கடந்தகால ஊழல், படுகொலைகளின் பிரதான பங்காளிகளாகவே எதிர்க்கட்சியினர் உள்ளனர். இதுதான் உண்மை.

“லசந்த விக்கிரமதுங்க எவ்வாறு படுகொலை செய்யப்பட்டார்? ஊடகவியலாளர் மீதான தாக்குதல்களின் பின்னணியில் அரச ஆதரவு உள்ளது.

தாஜூதின் படுகொலை, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் பின்னணியில் அரச அதிகாரம் உள்ளது. இதனை வெளிப்படுத்தக் கூடாதா?

“நாட்டு மக்கள் எவரும் விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குற்றவாளிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் தான் திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.எத்தனை கூடாரமிட்டு போராடினாலும் விசாரணைகளை நிறுத்த போவதில்லை.

 “ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்.

பாதாள குழுக்களுடன் 52 முறை தொலைபேசியில் உரையாடிய நபரும், அவர்களிடம் இலஞ்சம் பெற்ற நபரும் எதிர்க்கட்சியில் உள்ளார்கள். இவர்களுக்கு எதிராக கட்சி மட்டத்தில் ஏதேனும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இவ்வாறானவர்களை இனியேனும் கட்சியில் வைத்துக்கொள்ளாதீர்கள்.

“நீதிமன்றத்துக்கு பயந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை நாட்டுக்கு கொண்டுவர சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்படும்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பணிகள் நிறைவடையும் நிலையில் காணப்படுகின்றன. ஆகவே, பயங்கரவாத தடைச் சட்டம் இந்தாண்டுக்குள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கப்படும்.

“ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் பாதாள குழுக்களை கட்டுப்படுத்த விசேட சட்டம் வெகுவிரைவில் இயற்றப்படும். “நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்கள் குறிப்பிட்ட சில காலத்துக்குள் நிரப்பப்படும்

“கீழ் நிலை நீதிமன்றங்களின் செயற்பாடுகளை பாதிப்புக்குள்ளாக்காத வகையில் தான் உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பவேண்டும்.

நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.